நடிகர் விக்ரம் நடித்து இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியானது தங்கலான் திரைப்படம். இப்படத்திற்கு ஒருபுறம் ஆதரவும் மறுபுறம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இந்நிலையில், “தங்கலான் சொதப்பல்! உண்மையை சொன்னால், பல பேருக்கு வலிக்கும்… படத்துல கதை புரிய வேண்டாமா?மக்களுக்கு.. பா ரஞ்சித், ஜாதி பெறுமை பேசி கோட்டை விட்ட தங்கலான்” என்ற கேப்ஷனுடன் தந்தி டிவி செய்தி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) கைரலாகி வருகிறது.
அதில், “தங்கலான் பார்த்த ரசிகர்கள் ஆத்திரம்.. டிக்கெட்டை திரும்ப கேட்டு வாக்குவாதம்.. படம் பாதியில் நிறுத்தப்பட்டு பணத்தை திரும்ப வழங்கிய, திரையரங்கு நிர்வாகம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது திரைப்படம் நன்றாக இல்லாத காரணத்தால் ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகத்திடம் பணத்தை திருப்பி கேட்டு வாங்கியதாக இச்செய்தியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்பது தெரிய வந்தது. இதுகுறித்து உண்மை தன்மையை கண்டறிய இதுகுறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, கடந்த ஆக 15ஆம் தேதி தந்தி டிவியின் யூடியூப் சேனலில் வைரலாகும் பதிவில் உள்ள செய்தி வேளியாகியுள்ளது.
அதில்,, “தூத்துக்குடியில் தங்கலான் திரையிடப்பட்ட “கிளியோபாட்ரா” என்ற திரையரங்கில் திரையிடலின் போது ஆடியோ சரியாக கேட்கவில்லை என்று கூறி திரையரங்கை விட்டு வெளியே வந்து ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது. இதனை ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகமும் செய்தியாக வெளியிட்டுள்ளது.
மேலும், நியூஸ் மீட்டர் சார்பாக திரையரங்கு நிர்வாகத்தை தொடர்புகொண்டு கேட்டபோது, “தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிரச்சினை எழுந்தது. அரை மணி நேரத்தில் அதனை சரி சேய்து அடுத்தடுத்த காட்சிகளை சரியாக திரையிட்டோம். தற்போது, ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் திரையிடப்படுகிறது” என்று விளக்கினர். அதேபோன்று, திரைப்படம் நன்றாக இல்லாத காரணத்தால் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டதா என்று கேட்டதற்கு, அவ்வாறு எதுவும் இல்லை என்று திரையரங்கு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தங்கலான் திரைப்படம் நன்றாக இல்லாத காரணத்தால் ரசிகர்கள் திரையரங்கு நிர்வாகத்திடம் பணத்தை திருப்பி கேட்டு வாங்கியதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் திரையிடலின் போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆடியோ கேட்காததால் ரசிகர்கள் பணத்தை திருப்பி கேட்டனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.