கால்பந்து விளையாட்டின் போது பார்வையாளர்கள் மைதானத்திற்குள் பொம்மைகளை தூக்கி வீசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், வீசப்படும் பொம்மைகள் பாலஸ்த்தீன குழந்தைகளுக்காக என்று கூறி பகிரப்பட்டு வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இது குறித்த உண்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி, “துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக பெசிக்டாஸ் ரசிகர்கள் ஆடுகளத்தில் பொம்மைகளை வீசினர்” என்ற தலைப்புடன் தி கார்டியன் தனது யூடியூப் சேனலில் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன் டிஷ்க்ரிப்ஷன் பகுதியில், “துருக்கி நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு நன்கொடையாக, இஸ்தான்புல்லில் பெசிக்டாஸ் மற்றும் அன்டலியாஸ்போர் இடையே நடந்த போட்டியின் போது ஆயிரக்கணக்கான டெட்டி பியர்களும், பொம்மைகளும் ஆடுகளத்தில் வீசப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
தி கார்டியன் வெளியிட்டுள்ள காணொலி
கிடைத்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து தேடுகையில், அதே தேதியில் அல் ஜஸீரா செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “இஸ்தான்புல் கால்பந்து கிளப் பெசிக்டாஸின் ரசிகர்கள் பிப்ரவரி 26ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆடுகளத்தின் மீது ஆயிரக்கணக்கான பொம்மைகளை வீசினர். 0-0 என முடிவடைந்த துருக்கி சூப்பர் லீக் ஆட்டம் 4 நிமிடங்கள் 17 வினாடிகளுக்குப் பிறகு இடைநிறுத்தப்பட்டது, அச்சமயம் ரசிகர்கள் பரிசுகளை ஆடுகளத்தில் வீசினர். பிப்ரவரி 6ஆம் தேதி உள்ளூர் நேரப்படி அதிகாலை 4:17 மணிக்கு துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு இந்த பொம்மைகள் அன்பளிப்பாக வழங்கப்படும்” என்று கூறப்பட்டுள்ளது. மேலும், இதே செய்தியை இந்தியா டுடே ஊடகமும் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக, பாலஸ்த்தீன் குழந்தைகளுக்காக மைதானத்தில் பொம்மைகள் வீசப்பட்டதாக வைரலாகும் காணொலியில் உண்மையில்லை. மாறாக, அந்த பொம்மைகள் துருக்கி நிலநடுக்கத்தில் உயிர் பிழைத்த குழந்தைகளுக்கு வழங்குவதற்காக கால்பந்து ரசிகர்களால் வீசப்பட்டவை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.