Fact Check: 15 ஆண்டுகளாக அமெரிக்க இஸ்லாமியர்கள் குறித்து எஃப்பிஐ ஆய்வு மேற்கொண்டதா? உண்மை என்ன

அமெரிக்க இஸ்லாமியர்கள் குறித்து 15 ஆண்டுகளாக எஃப்பிஐ மேற்கொண்ட ஆய்வறிக்கை என்று சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது

By Ahamed Ali
Published on : 23 April 2025 9:24 PM IST

Fact Check: 15 ஆண்டுகளாக அமெரிக்க இஸ்லாமியர்கள் குறித்து எஃப்பிஐ ஆய்வு மேற்கொண்டதா? உண்மை என்ன
Claim:எஃப்பிஐ அமெரிக்க இஸ்லாமியர்கள் குறித்து 15 ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வறிக்கையை அந்நாடு வெளியிட்டுள்ளது
Fact:இத்தகவல் உண்மை அல்ல. இது The Onion என்ற நையாண்டி ஊடகத்தால் வெளியிடப்பட்ட நையாண்டி கட்டுரை

“உளவு பார்க்கச் சென்றோம்...! முழு நிலவு பார்த்து நின்றோம்...!” என்ற தலைப்பில் இஸ்லாமிய மார்க்கத்தையும் இஸ்லாமியர்களையும் புகழ்ந்து கட்டுரை சமூக வலைதளங்கள் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “அமெரிக்காவின் முஸ்லிம் சமூகத்தையும் அதன் நடவடிக்கைகளையும் கண்காணிக்க, 2001 முதல் 2016 வரை சுமார் பதினைந்து வருடங்கள், பதினைந்தாயிரம் உளவாளிகள் மூலம், நாடு முழுவதும் உள்ள பள்ளிவாயில்கள், குர்ஆனிய வகுப்புகள், வழிபாட்டு மற்றும் சமூக நிகழ்ச்சிகளின் ரகசிய ஒலிப்பதிவுகள், மற்றும் கண்காணிப்புகள், உலக அளவில் உள்ள 7485 முஸ்லிம் பிரபலங்களின் மின்னஞ்சல்கள் என தேடித்துருவி உளவுபார்த்து, எஃ.பி.ஐ. இன் பணிப்பாளர் 'ஜேம்ஸ் பி கொமி'யும் அதன் முன்னாள் அதிகாரி 'கேசி ஹன்னா'வும் சமர்ப்பித்த ஆய்வறிக்கையின் சாராம்சம் இது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இஸ்லாமிய மார்க்கத்தை புகழ்ந்து ஒரு நீண்ட கட்டுரை ஒன்று அதோடு வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் நையாண்டியாக வெளியிடப்பட்ட செய்தி என்பது தெரியவந்தது.

வைரலாகும் தகவல் குறித்து கூகுளில் தேடுகையில் The Onion என்ற அமெரிக்க ஊடகம் 2016ஆம் ஆண்டு ஜூன் 10ஆம் தேதி வைரலாகும் அதே கட்டுரையை “அழகான கலாச்சாரம் குறித்த 15 ஆண்டுகால ஆய்வை முடித்த பிறகு, முஸ்லிம் அமெரிக்கர்கள் மீதான கண்காணிப்பை FBI நிறுத்துகிறது” என்ற தலைப்பில் கட்டுரையாக வெளியிட்டுள்ளது.



The Onion ஊடகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொறுப்பு துறப்பு

தொடர்ந்து அந்த ஊடகம் குறித்து ஆய்வு செய்கையில். ஊடகத்தின் About Us பக்கத்தில் The Onion ஊடகம் பொறுப்புத் துறந்துள்ளது. அதில் தன்னை “ஒரு நையாண்டி செய்தித்தாள்” என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், இவர்கள் “ஜெல்லி பீன்ஸ் முழுவதையும் சாப்பிட்ட பிறகு போப் பிரான்சிஸ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்”, “பேஸ்புக் சந்தையில் மனித எலும்புகளை விற்றதாக பெண் மீது குற்றச்சாட்டு” என்பது போன்ற பல்வேறு நையாண்டி செய்திகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


The Onion ஊடகம் வெளியிட்டுள்ள நையாண்டி கட்டுரை

Conclusion:

முடிவாக, நம் தேடலில் 15 ஆண்டுகளாக அமெரிக்க இஸ்லாமியர்கள் குறித்து எஃப்பிஐ மேற்கொண்ட ஆய்வு முடிவை அமெரிக்கா வெளியிட்டுள்ளது என்று வைரலாகும் தகவல் நையாண்டி ஊடகத்தில் வெளியான செய்தி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:அமெரிக்கா வெளியிட்ட அமெரிக்க இஸ்லாமியர்கள் குறித்த எஃப்பிஐயின் ஆய்வறிக்கை
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:இத்தகவல் உண்மை அல்ல. இது The Onion என்ற நையாண்டி ஊடகத்தால் வெளியிடப்பட்ட நையாண்டி கட்டுரை
Next Story