Fact Check: காஞ்சிபுரத்தில் இரு சாதியினர் இடையே மோதல் என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக

காஞ்சிபுரத்தில் இரு சாதி பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதாகவும் சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali
Published on : 19 May 2025 6:52 PM IST

Fact Check: காஞ்சிபுரத்தில் இரு சாதியினர் இடையே மோதல் என்று வைரலாகும் காணொலி? உண்மை அறிக
Claim:காஞ்சிபுரத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல்
Fact:வைரலாகும் காணொலியில் இருப்பது உண்மையில் கோவில் விழாவில் நடத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்ம உற்சவம் கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக பிரம்மோற்சவத்தில் 5 நாளான கடந்த மே 15ஆம் தேதி காலை தங்க பல்லாக்கில் மோகினி அலங்காரத்தில் வரதராஜ பெருமாள் வீதி உலா அதிகாலையில் இருந்து நடைபெற்றது. பல்வேறு இடங்களில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெறும், ஆகையால் அன்று (மே 15) மாலை 3 மணி அளவில் பேருந்து நிலையம் நெல்லுக்கார வீதி வழியாக சுவாமி வீதி உலா வருகை தந்து கொண்டிருந்தபோது, வடகலை பிரிவினர் ஸ்தோத்திரம் பாடிவந்த நிலையில் அதில் தென்கலை பிரிவினர் உடன் பாடும் பொழுது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுதொடர்பான சண்டை காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில், “காஞ்சிபுரத்தில் மீண்டும் இரு ஜாதி பிரிவினரிடையே மோதல். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட பயங்கரம். பதட்டத்தில் வட தமிழ்நாடு. வருடாவருடம் வெடிக்கும் ஜாதி சண்டை.” என்ற கேப்சலுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது.


வைரலாகும் பதிவு

Fact-check:

நியூஸ் மீட்டரின் ஆய்வில் இது கோவில் விழாவின் போது ஏற்பாடு செய்யப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி என்பது தெரியவந்தது.

முதலில், வைரலாகும் காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2024ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி வைரலாகும் அதே காணொலியை Dr.Magizh என்ற எக்ஸ் பயனர், "உள்ளுக்கா இருப்பவன் வடகலையா இல்ல வெளிய இருப்பவன் வடகலையா” என்ற கேப்ஷனுடன் பதிவிட்டிருந்தார். கிடைத்த காணொலியில், தெலுங்கு மொழியில் எழுதப்பட்டிருந்த சொற்களை Google lens உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தோம். அப்போது, “ஆந்திர மாநிலம் சிம்மாச்சலத்தில் அமைந்துள்ள வராக லட்சுமி நரசிம்மா் கோவிலில் நடத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி” என்று எழுதப்பட்டிருந்தது.


Google lens மொழிபெயர்ப்பு

மேலும், காணொலியில் இருந்த @sribhakthitattvamofficial என்ற சொல்லை பயன்படுத்தி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேடியதில். “சிம்மாச்சலத்தில் உள்ள வராக லட்சுமி நரசிம்மா் கோவிலில் நடந்த வேடிக்கை(Funotsavam) நிகழ்ச்சி” என்ற கேப்ஷனுடன் வைரலாகும் அதே காணொலி 2024ஆம் ஆண்டு மே 3ஆம் தேதி பதிவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, காணொலியில் இருக்கக்கூடிய சிலர் மகிழ்ச்சியுடன் சிரிப்பதையும் நம்மால் காண முடிகிறது. இவற்றைக் கொண்டு இவர்கள் சண்டையிட்டுக்கொள்ளவில்லை என்பது தெரியவருகிறது.


காணொலியில் சிரிப்புடன் இருக்கும் நபர்கள்

Conclusion:

முடிவாக, நம் தேடலில் காஞ்சிபுரத்தில் இரு சாதி பிரிவினர் இடையே மோதல் என்று வைரலாகும் காணொலியில் இருப்பது கோவில் விழாவில் நடத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:காஞ்சிபுரத்தில் இரு சாதியினர் இடையே மோதல்
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook, X
Claim Fact Check:False
Fact:வைரலாகும் காணொலியில் இருப்பது உண்மையில் கோவில் விழாவில் நடத்தப்பட்ட வேடிக்கை நிகழ்ச்சி
Next Story