Fact Check: இஸ்லாமியர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதல் என வைரலாகும் செய்தி, உண்மை என்ன?

இஸ்லாமியர்களின் இரு குழுவாக பிரிந்து மாறி மாறி தாக்குவதாக ஒரு செய்தி தவறாக பரப்பப்படுகிறது.

By Ahamed Ali  Published on  7 Jan 2025 7:51 PM IST
Fact Check: இஸ்லாமியர்கள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதல் என வைரலாகும் செய்தி, உண்மை என்ன?
Claim: தொழுகை நடத்தும் இடத்திலும் இஸ்லாமியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தாக்குகின்றனர்
Fact: பதவிகளை பெறுவதில் ஏற்பட்ட மோதலை, இஸ்லாமியர்கள் குழுக்களாக பிரிந்து மோதுவதாக தவறாக செய்தி பரப்பப்படுகிறது.

“தொழுக போகும் இடத்தில் கூட இப்படி இருபிரிவாக பிரிந்து அடிச்சிக்கிறாங்க” என்ற கேப்ஷனுடன் மசூதிக்குள் இரு பிறவினர்கள் கடுமையான மோதலில் ஈடுபடும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகின்றது. இது மதரீதியாக இஸ்லாமிற்குள் இருக்கும் இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல் என்பது போன்று பரப்பி வருகின்றனர்.



Fact-check:

நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர்கள் பதவிக்காக அடித்துக்கொண்டதும் தெரிய வந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Mushahid Qadri என்பவர் வங்கதேசத்தில் உள்ள பைத்துல் முக்ர்ரம் என்ற பள்ளியில் இரு பிரிவினர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் என்று வைரலாகும் காணொலியை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.



தொடர்ந்து கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, prothomalo என்ற வங்கதேச ஊடகம் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “தற்போதைய வங்கதேச அரசாங்கம் பைத்துல் முகர்ரம் மசூதியின் இமாமாக (இஸ்லாமிய தொழுகை நடத்துபவர்) வலியுர் ரஹ்மான் கானை நியமித்தது. இதனையடுத்து அவாமி லீக் அரசாங்கத்தின் போது இமாமாக இருந்த ரூஹுல் அமீன் தலைமறைவானார்.

இச்சூழலில், தற்போதைய இமாம் மற்றும் முன்னாள் இமாம் ஆகியோரின் ஆதரவாளர்கள் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு முன்பு பைத்துல் முகர்ரம் மசூதியில் ஒன்றுகூட ஆரம்பித்தனர். அச்சமயம் அவர்கள் பிரசங்கம் செய்வதில் மோதல் ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும், இந்த மோதல் தொடர்பாக 54 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக The Business Standard கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, “இச்சம்பவத்தில் சுமார் 500 முதல் 600 நபர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஜியாவுர் ரஹ்மான் என்ற நபர் செப்டம்பர் 21ஆம் தேதி பல்தான் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்தார்.

அதன்படி, இஸ்லாமிய அறக்கட்டளையின் இமாம் அபு சலே பட்வாரி மதியம் 12:30 மணியளவில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைக்கு முன் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார், அப்போது ரூஹுல் அமீனும் மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களும் அவரை பிரசங்க மேடையில் இருந்து கீழே இழுத்து மைக்ரோஃபோனை எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் மோதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுள்ளனர். ஆனால், ரூஹுல் அமீனின் உத்தரவின் பேரில், அவரது மகன் ஒசாமா அமீன் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரும்பு கம்பிகள், சுத்தியல், குச்சிகள் மற்றும் செங்கற்களால் அவர்களை தாக்கினர். இதில் சுமார் 50 முதல் 60 பேர் வரை காயமடைந்தனர்.

ருஹுல் அமீன் தன்னை மீண்டும் இமாமாக அமர்த்திக் கொள்வதற்காக தனது ஆதரவாளர்களுடன் பைத்துல் முகர்ரம் மசூதிக்கு வந்தார். இதன் காரணமாகவே வலியுர் ரஹ்மானுக்கும் ரூஹுல் அமீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Conclusion:

நம் தேடலின் முடிவாக இஸ்லாமியர்கள் இரு பிரிவினர்களுக்கு இடையே மதரீதியான மோதல் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர்கள் பதவிக்காக அடித்துக் கொண்டனர் என்றும் ஆதாரப்பூர்வமாக தெரிய வந்தது.



Claim Review:தொழுகை நடத்தும் இடத்தில் கூட இரு பிரிவாக பிரிந்து இஸ்லாமியர்கள் தாக்குவதாக பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:X
Claim Fact Check:False
Fact:பதவிகளை பெறுவதில் ஏற்பட்ட மோதலை, இஸ்லாமியர்கள் குழுக்களாக பிரிந்து மோதுவதாக தவறாக செய்தி பரப்பப்படுகிறது.
Next Story