“சவுதி அரேபியாவின் ராணுவ மந்திரி ரியாத்தில் உள்ள சைனா எம்பஸிக்கு சென்றபோது அவரை வரவேற்கும் விதமாக பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சியை முன்கூட்டியே அறிவிக்காததால் மந்திரி வந்து இறங்கியதும் நடந்த நிகழ்வினை பார்த்து ரசியுங்கள்” என்ற கேபஷ்னுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.
அதில், அரபு உடை அணிந்த இருவர் காரில் இருந்து வெளியே வர சிறிது நேரத்தில் அவ்விடத்தில் வெடிகுண்டு வெடிக்கிறது. உடனடியாக அரபு உடை அணிந்த ஒருவரை சுற்றி இருக்கும் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பாக அழைத்துச் செல்கின்றனர். இதில் அரபு உடை அணிந்திருப்பவர் சவுதி அரேபியாவின் ராணுவ அமைச்சர் என்றும் அவர் ரியாத்தில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்ற போது அறிவிப்பின்றி பட்டாசு வெடிக்கப்பட்டதாகக் கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் இக்காணொலி போலி ராணுவ அணிவகுப்பின் போது எடுக்கப்பட்டது என்றும் தெரியவந்தது.
இதன் உண்மைத் தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, almowaten என்ற சவுதி ஊடகம் 2019ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், “இது குவைத்தில் நடைபெற்ற வளைகுடா பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து கண்காட்சியின் போது நடைபெற்ற அமிரி காவல்படையின் போலி ராணுவ அணிவகுப்பு” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிடைத்த தகவலை கொண்டு இது தொடர்பாக தேடினோம். அப்போது, வைரலாகும் காணொலியின் மற்றொரு கோணக் காட்சியுடன் Al Hadath என்ற ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதிலும், வளைகுடா பாதுகாப்பு மற்றும் விண்வெளி கண்காட்சியின் போது நடைபெற்ற அமிரி காவலர்களின் போலி ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, “ஐந்தாவது வளைகுடா பாதுகாப்பு மற்றும் விமானப் போக்குவரத்து கண்காட்சியில் நடத்தப்பட்ட இளவரசரின் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு குறித்த காட்சியின் ஒரு பகுதி, இக்கண்காட்சி 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10 முதல் 12 வரை நடைபெற்றது” என்ற தகவலுடன் குவைத் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொலி வெளியிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சவுதி அரேபியாவின் ராணுவ அமைச்சர் ரியாத்தில் உள்ள சீன தூதரகத்திற்கு சென்ற போது அறிவிப்பின்றி பட்டாசு வெடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் குவைத்தில் நடைபெற்ற போலி ராணுவ அணிவகுப்பு என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.