“கூடங்குளத்தில் அணுக்கதிர் வீச்சினால் அழிவு தொடங்கிவிட்டதாக தெரிகிறது. கோடிக்கணக்கில் மீன்கள் இறந்து இன்னும்கூட கரை ஒதுங்கிக் கொண்டிருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. ஒரு அறிஞர் (பாஜக ஜனாதிபதியாக்கியது, காங்கிரஸ் அவரை இரண்டாவது முறையாக ஜனாதிபதியாக தொடரவிடலன்னு ஆதங்கம் பலருக்கு) சர்டிபிகேட் கொடுத்தாரு…” என்ற கேப்ஷனுடன் கடலோரத்தில் இறந்த நிலையில் மீன்கள் கரை ஒதுங்கிக் கிடக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கூடங்குளத்தில் இயங்கிவரும் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் அணுக்கதிர்வீச்சின் காரணமாக கடலில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதாக கூறி இக்காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 24ஆம் தேதி ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “கூடங்குளம் கடற்கரை பகுதியில் திடீரென லட்சக்கணக்கிலான கிளாத்தி வகை மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன. மேலும், கரை ஒதுங்கிய மீன்களால் துர்நாற்றமும் வீசத் துவங்கியுள்ளது.
இது குறித்து ராதாபுரம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, கன்னியாகுமரி மாவட்டம், சின்னமுட்டம் பகுதியில் அதிக அளவில் கிளாத்தி மீன்கள் பிடிக்கப்பட்டு அவைகள் விற்பனை ஆகாததால் கடலில் கொட்டப்பட்டுள்ளன. அந்த மீன்கள் கடற்கரை ஓரம் ஒதுங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்” என்று கூறப்பட்டுள்ளது. இதே செய்தியை புதிய தலைமுறை ஊடகமும் தனது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், பாலிமர் நியூஸ் ஊடகம் வைரலாகும் காணொலியுடன் இச்செய்தியை தனது யூடியூப் சேனலில் கடந்த 24ஆம் தேதி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கூடங்குளத்தில் இயங்கிவரும் அணுமின் நிலையத்தில் இருந்து வெளியேறும் அணுக்கதிர்வீச்சின் காரணமாக கடலில் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவதாக வைரலாகும் காணொலி உண்மையில்லை என்றும் உண்மையில் கன்னியாகுமரி மாவட்டம் சின்னமுட்டம் பகுதியில் பிடிக்கப்பட்ட அதிக அளவிலான கிளாத்தி மீன்கள் விற்பனை ஆகாமல் கடலில் கொட்டப்பட்டுள்ளன. அந்த மீன்களே கூடங்குளம் கடற்கரை ஓரம் ஒதுங்கியதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர் என்று கூற முடிகிறது.