“இறந்தவர்களை தகனம் செய்ய தடை: அயோத்தியில் ராமர் கோவிலில் பகவான் ஸ்ரீராமரின் சிலை பிராண பிரதிஷ்டை செய்யப்படும் ஜன 22, 2024 அன்று இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது இறந்தால் அவர்களை தகனம் செய்ய உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா குஜராத் ஆகிய மாநிலங்களில் தடை” என்று இன்றைய(ஜனவரி 20) தேதியிட்ட பாலிமர் நியூஸ் ஊடகத்தின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத்தன்மையை கண்டறிய முதற்கட்டமாக வைரலாகும் தகவல் குறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இந்து தமிழ் திசை கடந்த ஜனவரி 13ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “உத்தரப் பிரதேச மாநில கலால் துறை, ஜனவரி 22ஆம் தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக் கூடாது என்று அனைத்து மதுபான கடைகளுக்கும் அறிவுத்தியுள்ளது. இது குறித்து உத்தரப் பிரதேச கலால் ஆணையர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதே போன்று அசாம் மாநிலத்திலும் மதுபான விற்பனைக்கு தடைவிதித்து அம்மாநில முதல்வர் ஹேமந்த பிஸ்வா சர்மா உத்தரவிட்டுள்ளார். உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் தாமி, மாநிலத்தில் மது விற்பனைக்கு தடைவிதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலமும் மது விற்பனைக்கு தடைவிதிக்க முடிவு செய்துள்ளது. இதன்படி அரசின் இந்த முடிவினை கட்டாயம் நடைமுறைப்படுத்தும் படி மாநில கலால் துறை அறிவுறுத்தியுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஜனவரி 18ஆம் தேதி Hindustan Times வெளியிட்டுள்ள செய்தியின் படி, “ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று உத்தரப்பிரதேசத்தில் மதுபான விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது இறைச்சி மற்றும் மீன் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. நம் தேடலில் எந்த மாநிலமும் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று இந்துக்களின் உடல்களை தகனம் செய்ய தடை விதித்து அறிவிக்கவில்லை என்று உறுதியாக கூற முடிகிறது.
தொடர்ந்து, பாலிமர் நியூஸ் ஊடகத்தின் சமூக வலைதளங்களில் தேடியபோது, “ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று பத்து மாநிலங்களில் விடுமுறை என்ற செய்தி மட்டுமே நியூஸ்கார்டாக வெளியிட்டுள்ளது”. மேலும், வைரலாகும் நியூஸ்கார்டைப் போன்று எதையும் அவர்கள் வெளியிடவில்லை என்பது தெரியவந்தது. பாலிமர் நியூஸ் ஊடகத்தின் தரப்பில் இருந்தும் இது போலி நியூஸ்கார்ட் என்று நியூஸ்மீட்டரிடம் உறுதி செய்துள்ளனர்.
பாலிமர் நியூஸ் ஊடகத்தின் நியூஸ்கார்ட்
Conclusion:
நம் தேடலின் முடிவாக ஐந்து மாநிலங்களில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று இந்துக்களின் உடல்கள் தகனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைரலாகும் பாலிமர் நியூஸ் ஊடகத்தின் நியூஸ்கார்ட் போலியானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.