சூரிய ஒளியின் உதவியுடன் மின்சாரம் தயாரிக்க சோலார் பேனல்கள் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை சூரிய ஒளி படக்கூடிய திறந்தவெளியில் நிறுவி அவற்றின் மூலம் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில், குஜராத் மாநிலத்தில் மிதக்கும் வகையில் இந்த சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இக்காணொலியில் இடம்பெற்றுள்ள சோலார் பேனல்கள் அனைத்தும் சீனாவில் உள்ளவை என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை ஆராய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அப்போது, ChinaYouthDaily என்ற சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகம் வைரலாகும் அதே காணொலியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், சீனாவில் உள்ள சோலார் பேனல்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சீன வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் Mao Ningம் வைரலாகும் அதே காணொலியை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவரட் சர்ச் செய்து பார்த்தபோது சீனாவின் அன்ஹுய் மாகாணத்தின் உள்ள ஹுவைனானின் வடமேற்குப் பகுதியில் உள்ள ஏரியில் இதுபோன்று மிதக்கும் சோலார் பேனல்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக Time ஊடகம் விரிவான செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோன்று சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தில் கடலின் மேல் இது போன்ற மிதக்கும் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
சீனாவில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல்கள் குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி
இந்தியாவில் இத்தகைய மிதக்கும் சோலார் பேனல் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்து தேடுகையில் தெலங்கானா, குஜராத், கேரளா, உத்தரப்பிரதேசம், ஆந்திர பிரதேசம், சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக குஜராத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல்கள் என்று வைரலாகும் காணொலியில் இருப்பது சீனாவில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல்கள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.