வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் அக்டோபர் 17ஆம் தேதி அதிகாலையில் சென்னைக்கு அருகில் புதுச்சேரி மற்றும் நெல்லூர் இடையே வட தமிழ்நாடு - தென் ஆந்திரப் பிரதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனையடுத்து, சென்னையின் பல்வேறு பகுதிகளில் லேசான மழை பெய்தது.
இந்நிலையில், “சத்யபாமா பல்கலைக்கழகம்… இப்பவாச்சும் சொல்லுங்கடா அந்த 4000 ஆயிரம் கோடி என்ன ஆச்சுனு.... கடலுக்கு பக்கத்துல இருக்குற தலைவர்கள் சமாதி ஏரியா மட்டும் பாதுகாப்பா இருக்கே எப்பிடி? வாழும் போதும் செத்த பின்னாடியும் பொது மக்கள் தான் கஷ்ட படனும் போல....... கேப்டனின் பேத்துப்பாறை மகேந்திரன்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், வெள்ள நீரில் மாணவர்கள் தங்களது உடமைகளை கொண்டு செல்லும் காட்சி பதிவாகியுள்ளது. இது சமீபத்தில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் பழையது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக இணையத்தில் தேடினோம். அப்போது, 2023ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி muskansingh vlogs என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் காணொலியில் இருக்கும் அதே மாணவர்கள் இருக்கக்கூடிய காணொலி ஒன்று பதிவிடப்பட்டுள்ளது.
அதிலும், சத்யபாமா பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள் பலரும் பல்கலைக்கழக வளாகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நீரில் தங்களது உடமைகளை எடுத்துக்கொண்டு வெளியேறும் காட்சி பதிவாகியுள்ளது. இதனைக் கொண்டு வைரலாகும் காணொலி பழையது என்று தெரியவந்தது.
தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் தற்போதைய நிலை குறித்து அறிய அங்கு பயிலும் மாணவர்களிடம் பேசியது நியூஸ்மீட்டர். அம்மாணவர்கள், நேற்று(அக்டோபர் 15) பெய்த மழையினால் தேங்கி இருந்த முழங்கால் அளவு தண்ணீர் இன்று(அக்டோபர் 16) காலை மோட்டார் பம்ப் உதவியுடன் வெளியேற்றப்பட்டதாகவும். கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ள பாதிப்பைப் போன்று இல்லை என்றும் விளக்கினர். பல்கலைக்கழகத்தின் அருகே உள்ள Guntur Kaaram என்ற உணவகத்தை கூகுள் மேப் உதவியுடன் தொடர்புகொண்டது நியூஸ் மீட்டர்.
அப்போது, பல்கலைக்கழகம் அமைந்துள்ள பகுதியில் வெள்ள பாதிப்பு இல்லை என்றும் எப்போதும் போன்று இயல்பாகவே இருப்பதாகவும் விளக்கம் அளித்தனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த செய்தியாளர்களும் அங்கு பெரிய அளவிலான பாதிப்பு ஏதும் இல்லை என்று உறுதிபடுத்தினர்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக சத்யபாமா பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளம் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பழையது என்றும் உண்மையில் அப்பகுதியில் வெள்ள பாதிப்பு இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.