நிலத்தில் கிடக்கும் பறக்கும் தட்டு போன்ற ஒன்றை விஞ்ஞானிகள் பலரும் ஆய்வு செய்வது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், “வானில் இருந்து விழுந்து விபத்திற்குள்ளான பறக்கும் தட்டு! அடையாளம் தெரியாத பறக்கும் சாதனத்தை இப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்களாம்! உள்ளே இருப்பவர்களை பிடித்து விசாரித்தால் பல உண்மைகள் தெரிய வரலாம்!” என்ற கேப்ஷன் இடம்பெற்றுள்ளது. இதனை உண்மை என்று நம்பி பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டர் ஆய்வில் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, “கத்தாரில் விழுந்த பறக்கும் தட்டு” என்று இதே காணொலியுடன் செய்தி பரவியது தெரியவந்தது. மேலும், அதனை misbar என்ற அரேபிய ஊடகம் ஃபேக்ட்செக் செய்து இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட காணொலி என்று குறிப்பிட்டு இருந்தது.
மேலும், இக்காணொலியை sybervisions_ என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் வெளியிட்டதாக misbar குறிப்பிட்டுள்ளது. கிடைத்த தகவலைக் கொண்டு இன்ஸ்டாகிராமில் sybervisions_ பக்கத்தை ஆய்வு செய்ததில் வைரலாகும் அதே காணொலி கடந்த டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது தெரிய வந்தது. மேலும், தன்னை AI VFX Artist என்று குறிப்பிடப்பட்டுள்ள அப்பக்கம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட பல்வேறு காணொலிகளையும் பதிவிட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது தான் என்று Truemedia இணையதளத்தில் நாம் செய்த ஆய்வின் மூலம் தெரிய வந்தது.
நம் தேடலின் முடிவாக வானில் இருந்து விழுந்த பறக்கும் தட்டு ஒன்றை விஞ்ஞானிகள் ஆய்வு செய்வதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.