துண்டிக்கப்பட்ட ஆண்களின் உடல்களுடன் நடைபெறும் பூஜை; நரபலியா?
பூஜையின் போது ஆண்களின் உடல் துண்டிக்கப்பட்டு தலை தனியாகவும், உடல் தனியாகவும் இருப்பது போன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 5 Dec 2023 12:26 AM ISTதுண்டிக்கப்பட்ட உடல்களுடன் நடைபெறும் பூஜை
“இது உண்மையாக இருந்தால் அத்தனை பேரையும் கைது செய்ய வேண்டும் அதிர்ச்சியா இருக்கு…” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், மேளதாளத்துடன் பெண் ஒருவர் பரவச நிலையில் ஆடுகிறார். அவருக்கு கீழே இரு ஆண்களின் தலை துண்டிக்கப்பட்டு தலை தனியாகவும், உடல் தனியாகவும் இருப்பது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி (இதயம் பலகீனமானவர்கள் பார்க்க வேண்டாம்)
Fact-check:
இது குறித்த உண்மைத்தன்மையைக் கண்டறிய முதற்கட்டமாக காணொலியை ஆய்வு செய்ததில் அப்பெண்ணுக்கு பின்னால் இருக்கும் இடத்தில் பெங்காலி மொழியில் எழுதப்பட்டு இருப்பது தெரியவந்தது. மேலும், AcuranTivi என்ற எக்ஸ் பயனர் இதே காணொலியை பதிவிட்டிருந்தார். அதனை நடிகர் பார்த்திபன், “இது என்ன வென யாரேனும் தெரிந்தால் சொல்லுங்கள். நானும் போலீஸுக்கு தெரியப்படுத்தியுள்ளேன்.” என்று கூறி ரீபோஸ்ட் செய்யவே பலரும் அதில் கமெண்ட் செய்திருந்தனர். அதில் ஒருவர், “இது Charak Puja யாரும் கொல்லப்படவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். மேலும், ஒருவர் இது வங்கதேசத்தில் நடைபெற்றது என்றும் குறிப்பிட்டிருந்தார்.
கிடைத்த தகவலின் அடிப்படையில் இது குறித்து யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இது தொடர்பான பல காணொலிகள் இருந்ததை நம்மால் காண முடிந்தது. அதில், MahakalKoushik என்பவர் பதிவிட்டிருந்த ஷார்ட்ஸில் வைரலாகும் காணொலியில் இருப்பதைப் போன்று இருவரின் உடல்களும் தலையும் தனித்தனியே இருந்தது. மேலும், காணொலியின் ஆரம்பத்தில் அதில் இருக்கும் நபர் அசைவது பதிவாகியுள்ளது. இதன் மூலம் அவர்கள் இறக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேலும், Dulal N Boro என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள காணொலியின் 6:09 பகுதியில் ஒருவர் தலையை துணியால் மூடிக்கொண்டு தரையினுள் தன் தலையை புதைக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பின்னர் 7:55 பகுதியில் அவர் உயிருடன் வெளியே வரும் காட்சியும் உள்ளது. Hello Dimapur என்ற யூடியூப் சேனலில் வெளியாகியுள்ள காணொலியின் 4:07 முதல் இறுதி வரையிலான பகுதியில் வைரலாகும் காணொலியில் இருப்பதைப் போன்று தலை தனியாகவும், உடல் தனியாகவும் இருக்கும் காட்சி உள்ளது. மேலும், இறுதியில் அதில் இருக்கும் நபர் உயிருடன் வெளியே வரும் காட்சியும் பதிவாகியுள்ளது.
Charak Puja குறித்து கூகுளில் தேடுகையில், “இது சிவபெருமானின் நினைவாக நடைபெறும் இந்து நாட்டுப்புற விழாவாகும். இவ்விழா இந்தியாவின் மேற்கு வங்காளத்திலும் வங்கதேசத்திலும் சித்திரை மாதத்தின் கடைசி நாளில்(ஏப்ரல் 13-14) (வங்காள நாட்காட்டியில் சோய்த்ரோ) நள்ளிரவில் அனுசரிக்கப்படுகிறது” என்று விக்கிப்பீடியாவில் உள்ளது. இது தொடர்பாக, ஃப்ரண்ட்லைன், அவுட்லுக் உள்ளிட்ட ஊடகங்கள் பல்வேறு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன. இருப்பினும் வைரலாகும் காணொலியை யார் வெளியிட்டார் என்பது குறித்த தகவல் கிடைக்கவில்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவில், வைரலாகும் காணொலியில் இருப்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்திலும் வங்கதேசத்திலும் கொண்டாடப்படும் Charak Puja என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.