"#பாலஸ்தீனத்துடன் துணை நிற்கும் ரொணால்டோ…" என்ற கேப்ஷனுடன் பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பேசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், "நீங்கள் மிகவும் கஷ்டப்படுகிறீர்கள் என்பதை நாங்கள் அறிவோம். உங்கள் நம்பிக்கையை கைவிட வேண்டாம் இந்த உலகம் உங்களுடன் உள்ளது, நான் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறுகிறார்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது 2016ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி Arab News என்ற சவுதி அரேபிய ஊடகம் தனது யூடியூப் சேனலில், "சிரியா குழந்தைகளிடம், நான் உங்களுடன் இருக்கிறேன் என்று கூறிய கால்பந்து நட்சத்திரம் ரொனால்டோ" என்ற தலைப்புடன் காணொலி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 3வது நொடியில் இருந்து வைரலாகும் அதே காணொலி பதிவாகியுள்ளது. மேலும், இதே பதிவை ரொனால்டோ தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்திலும் பதிவிட்டுள்ளார். ESPN இது தொடர்பாக விரிவான செய்தியையும் வெளியிட்டுள்ளது.
ரொனால்டோவின் எக்ஸ் பதிவு
தொடர்ந்து, அதே காணொலியில் மைதானத்தில் இருக்கும் ரொனால்டோ பாலஸ்தீன் கொடியை தன் மீது போர்த்திக்கொள்வது போன்ற காணொலி ஒன்றும் உள்ளது. அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Doha News Official என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி பதிவாகி இருந்தது. மேலும், அதன் டிஸ்க்ரிப்ஷன் பகுதியில், "அல் துமாமா மைதானத்தில் மொராக்கோ கால்பந்து அணி கனடா அணியை வீழ்த்திய போது ஜவாத் எல் யாமிக் என்ற மொராக்கோ அணியின் வீரர் ஆடுகளத்தில் பாலஸ்தீனக் கொடியை உயர்த்தினார்" என்று கூறப்பட்டுள்ளது. இதே காணொலியை Middle East Eye என்ற ஊடகமும் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கால்பந்து வீரர் ரொனால்டோ பாலஸ்தீனுடன் துணை நிற்பதாக வைரலாகும் காணொலி உண்மையில் சிரியா குழந்தைகளுக்காக வெளியிடப்பட்டது என்றும் ரொனால்டோ பாலஸ்தீன் கொடியை தன் மீது போர்த்திக்கொள்வது போன்ற காணொலியில் இருப்பது மொராக்கோ கால்பந்து வீரர் ஜவாத் எல் யாமிக் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.