பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு மாநாடு பிப்ரவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் நடைபெற்று முடிந்தது. இதில் உலகத் தலைவர்கள் பலரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனங்களும் பங்கேற்றனர். மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். செயற்கை நுண்ணறிவு மாநாட்டின் இரண்டாவது நாளான நேற்று (பிப்ரவரி 11) பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.
இந்நிலையில், மாநாட்டு அரங்கத்திற்குள் வந்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அங்கிருந்த உலகத் தலைவர்கள் அனைவரிடமும் கைகுலுக்குகிறார். ஆனால், பிரதமர் மோடியிடம் மட்டும் கைகுலுக்காமல் செல்லும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாக பகிரப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியை பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் அவமதித்ததாக கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் இருவரும் மாநாட்டிற்கு முன்பாகவே சந்தித்து கைகுலுக்கி கட்டித்தழுவிக்கொண்டனர் என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை கண்டறிய பாரிஸில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு மாநாடு குறித்து யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Reuters ஊடகம் மாநாட்டின் நேரலை காணொலியை வெளியிட்டு இருந்தது. அதில், 50:30 முதல் 50:56 வரையிலான பகுதியில் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகிய இருவரும் மாநாடு நடைபெறும் பகுதிக்குள் வரும் போதே கைகுலுக்கி மகிழ்ச்சியோடு பேசிக் கொள்கின்றனர். இதனை பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் புகைப்படமாக பதிவிட்டுள்ளார். தொடர்ந்து, இருவரும் ஒன்றாக இணைந்தே உலகத் தலைவர்களை சந்திக்க அரங்கிற்குள் செல்கின்றனர்.
மேலும், இருவரும் கட்டித்தழுவிகொள்ளும் புகைப்படத்தை பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, “எனது நண்பர் அதிபர் மேக்ரோனை பாரிஸில் சந்தித்ததில் மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார். அதேசமயம், பிரான்ஸ் வந்திரங்கிய பிரதமர் நரேந்திர மோடிக்கு முறையான அரசு மரியாதை அளிக்கப்பட்டு இருக்கும் காணொலி பிரதமர் மோடியின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் பிரதமர் நரேந்திர மோடியிடம் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன் கைகுலுக்காமல் சென்றதாக வைரலாகும் தகவல் தவறானது. இருவரும் அதற்கு முன்பாகவோ கைகுலுக்கி கட்டித்தழுவிக்கொண்டனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.