“ஓட்டுங்கடா ஸ்டிக்கர். இது கொலுசல்ல குவாட்டர் இல்லம் தேடி வரும் திட்டம் தேர்தலுக்கு தயாராகும் திமுக” என்ற கேப்ஷனுடன் ஒரு பரிசு பெட்டியில் சிகரெட், மது, பண உறைகள் போன்றவை இருக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இவற்றை திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதாக கூறி பரப்பி வருகின்றனர்.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, அதில் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம் இடம்பெற்றிருப்பதை அறியமுடிகிறது. மேலும், அதில் TDP என்று தெலுங்கு தேசம் கட்சியின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதனைக் கொண்டு முதற்கட்டமாக இது ஆந்திராவில் நடைபெற்ற நிகழ்வு என்பது தெரிகிறது.
வைரலாகும் காணொலியில் இடம்பெற்றுள்ள TDP லோகோ மற்றும் சந்திரபாபு நாயுடுவின் புகைப்படம்
தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பிப்ரவரி 28ஆம் தேதி இந்தியா டுடே(Archive) செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதன்படி, “ஆந்திரப் பிரதேச சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களுக்கு முன்னதாக, ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சியும் மது, ரொக்கம், சிகரெட் மற்றும் இனிப்புகள் போன்றவற்றை வழங்கி வாக்குகளை குவிப்பதாக கூறப்படுகிறது.
சிகரெட் பாக்கெட்டுகள், மதுபாட்டில்கள் மற்றும் டிடிபி லோகோக்கள் கொண்ட பண உறைகள் அடங்கிய பரிசுப் பெட்டியின் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், Free Press Journal(Archive)கடந்த மார்ச் 10ஆம் தேதி வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையிலும் இது உறுதியாகிறது. இருப்பினும் இந்த பரிசு பெட்டகங்கள் யாரால் விநியோகிக்கப்பட்டது, உண்மையில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டதா என்பது போன்ற தெளிவான தகவல்கள் இல்லை.
Conclusion:
நம் தேடலின் முடிவாக தேர்தலை ஒட்டி திமுகவினர் வாக்காளர்களுக்கு விநியோகித்த பரிசு பெட்டகங்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி உண்மையில் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சியினரால் விநியோகிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.