திருப்பதியில் அர்ச்சகர் ஒருவர் வீட்டில் 128 கிலோ தங்கம், 150 கோடி ரொக்கம், 70 கிலோ வைரம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், “இனியாவது கோவிலில் பணத்தையும் நகையையும் வாரிக்கொடுப்போர் சிந்தியுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காணொலியில் நகைகள் குவியலாக மேசையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் காணொலியில் இருப்பது வேலூரில் உள்ள நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் என்று தெரியவந்தது.
India Today வெளியிட்டுள்ள செய்தி
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி The Hindu செய்தி வெளியிட்டிருந்தது. அதில், மயானத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16 கிலோ நகைகளை காவல்துறையினர் கைப்பற்றியதை அடுத்து பள்ளிகொண்டா அருகே குச்சிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமன் (23) என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இவர் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு அந்த நகைகளை கொள்ளையடித்துள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை India Today ஊடகம் அதே தேதியில் வெளியிட்டுள்ளது. மேலும், வைரலாகும் காணொலியில் இருப்பது போன்ற அதே காணொலியை BBC Tamil ஊடகம் தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் திருப்பதியில் அர்ச்சகர் வீட்டில் கைப்பற்றப்பட்ட 128 கிலோ தங்கம் 150 கோடி ரொக்கம் மற்றும் 70 கிலோ வைரம் ஆகியவை கைப்பற்றப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அது வேலூரில் உள்ள நகைக்கடையில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட காணொலி என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.