“இலங்கையில் பூமியை தோண்டும் போது கிடைத்த 2 டன் எடையுள்ள கதை கிரேன் மூலம் டிரைலரில் ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இராமாயணம் வெறும் கதையல்ல” என்ற கேப்ஷனுடன் மிகப்பெரிய அனுமனின் கதாயுதத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் அதில் உள்ள கதாயுதம் இந்தூரில் உள்ள அனுமன் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டது என்றும் தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, The Viral Fake News என்ற பேஸ்புக் பக்கத்தில் மே 26, 2017ஆம் ஆண்டு வைரலாகும் கதாயுதத்தின் புகைப்படம் பதிவிடப்பட்டிருந்தது.
மேலும் அதில், “இலங்கையில் தொல்லியல் ஆய்வின் மூலம் இந்த அனுமரின் கடம் கண்டெடுக்கப்பட்டதாக வைரலாகும் தகவல் தவறானது. இது ஏப்ரல் 25, 2013ஆம் ஆண்டு அனுமன் ஜெயந்தியின் போது இந்தூரில் உள்ள 125 அடி உயர அனுமன் சிலையில் 45 அடி கதாயுதம் நிறுவப்பட்ட புகைப்படம்.
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு இந்தூரின் புறநகரில் உள்ள நந்தா நகரிலிருந்து பித்ரா பர்வத்துக்கு 125 அடி உயரமுள்ள அனுமனின் சிற்பத்துடன் நிறுவுவதற்காக 21 டன்கள் எடையுள்ள இந்த கதாயுதம் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பதிவோடு அந்த கதாயுதம் இந்தூருக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் காணொலியும் இணைக்கப்பட்டுள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக Dainik Bhaskar இந்தூரின் பித்ரா பர்வத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த அனுமன் சிலை மற்றும் கதாயுதம் குறித்த விரிவான செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், இதை உருவாக்க 10 கோடி ரூபாய் செலவானதாகவும் 18 கைவினைஞர்கள் ஒரு நாளைக்கு 10 முதல் 12 மணி நேரம் உழைத்து ஆறு வருடங்களில் செய்து முடித்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தொடர்ந்து தற்போது யூடியூபில் பித்ரா பர்வத்தில் உள்ள அனுமன் சிலை மற்றும் கதாயுதம் குறித்து தேடியபோது, அது தொடர்பாக பல்வேறு காணொலிகள் பதிவிடப்பட்டுள்ளன.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இலங்கையில் தொல்லியல் அகழாய்வின்போது கண்டெடுக்கப்பட்ட அனுமனின் கதாயுதம் என்று வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அது இந்தூரின் பித்ரா பர்வத்தில் உள்ள அனுமன் கோவிலில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய கதாயுதம் என்பது தெரியவந்தது.