“சவுதி மெக்காவில் கடும் புயல், வெள்ளம், மழை அல்லா மெக்காவை காப்பாற்ற முடியாமல் அடித்துச் செல்லப்படுகின்றது.....இயற்கை வளங்கள் அழிக்க படும் என்றால் எந்த தேசமும் அழிவு நிச்சியம்........அது எந்த கடவுளும் காப்பாத்த முடியாது.... மாறுவோம் நல்ல மனிதர்களாக வாழ்வதற்கு…” என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. அதில், மெக்காவில் கடும் புயல் வெள்ளம் மற்றும் மழை பெய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியை முதலில் ஆய்வு செய்தோம். அப்போது, வெவ்வேறு காணொலிகளை எடிட் செய்து ஒரே காணொலியாக பகிரப்பட்டடது என்பது தெரியவந்தது. அதில், 6 விநாடி முதல் இருந்து காணொலியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, Puneet Singh Banga என்ற பேஸ்புக் பயனர் 2022ஆம் ஆண்டு ஜூன் 21ஆம் தேதி, “அமிர்தசரஸ் ஸ்ரீ தர்பார் சாஹிப்பில் இடியுடன் கூடிய கனமழை பெய்த காட்சிகள்” என்று வைரலாகும் காணொலியை பதிவிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து, 16 விநாடி முதல் வரக்கூடிய காணொலியை ஆய்வு செய்தோம். அப்போது, 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23ஆம் தேதி Al Jazeera “மெக்காவில் உள்ள மணிக்கூண்டைத் தாக்கிய மின்னல் மற்றும் புயலால் வீசிய பலத்த காற்று” என்று வைரலாகும் காணொலி பதிவிடப்பட்டுள்ளது. 39வது விநாடியில் வரக்கூடிய காணொலியை ஆய்வு செய்ததில், அது ஸ்பெயின் நாட்டின் மஜோர்கா என்ற தீவில் வீசிய சூறாவளியின் போது எடுக்கப்பட்ட காணொலி என்று Daily Mail 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக சவுதி அரேபியாவின் மெக்காவில் கடும் புயல் வெள்ளம் மற்றும் மழை என்று வைரலாகும் காணொலி உண்மையில் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இயற்கை சீற்றங்களின் காணொலிகள் எடிட் செய்யப்பட்டு ஒன்றாக பரப்பப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.