பண்டைய தமிழர்களின் கட்டிடக்கலைக்கு மிகச் சிறந்த உதாரணமாக திகழ்வது தஞ்சை பெரிய கோயில். தஞ்சாவூரில் அமைந்துள்ள இக்கோயில் 1000 ஆண்டுகளைக் கடந்து தற்போதும் கட்டிடக்கலையின் ஒரு அற்புதமாக திகழ்கிறது. இந்நிலையில், இக்கோயிலில் இந்தி மொழியில் கல்வெட்டு இருப்பதாகவும் ஏற்கனவே உள்ள தமிழ் கல்வெட்டுகளை நீக்கிவிட்டு இந்தி கல்வெட்டுகளை பதிப்பதாகவும் கூறி ஒருவர் பேசக்கூடிய காணொலி சமூக வலைத்தளங்களில் (Archive) வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இது மராத்தி மொழி கல்வெட்டு எனவும் தமிழ் மொழி கல்வெட்டுக்கள் யாவும் மாற்றப்படவில்லை என்றும் தெரியவந்தது.
வைரலாகும் தகவலின் உண்மை தன்மையை கண்டறிய இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, The New Indian Express ஊடகம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி வைரலாகும் காணொலி தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது. அதில், “தஞ்சை பிரகதீஸ்வரர் கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகளுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுகள் மாற்றப்படுவதாகக் கூறும் ஒரு காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
The New Indian Express வெளியிட்டுள்ள செய்தி
காணொலியில் காட்டப்பட்டுள்ள தேவநாகரி எழுத்துக்கள் இந்தி அல்ல, மராத்தி. அவை சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மராட்டிய வம்சத்தால் ஆளப்பட்டபோது கோயில் கற்களில் பதிவு செய்யப்பட்டன என்று தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் தொல்லியல் துறைத் தலைவரும், கல்வெட்டு நிபுணருமான டாக்டர் எஸ். ராஜவேலு கூறியதாக” குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சை பெரிய கோயிலில் தமிழ் கல்வெட்டுக்களுக்கு பதிலாக இந்தி கல்வெட்டுக்கள் மாற்றப்படவில்லை என்று இந்திய தொல்லியல் துறை விளக்கம் அளித்துள்ளதாக Times of India ஊடகம் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், இந்திய தொல்லியல் துறையின் தஞ்சை பெரிய கோயிலுக்கான பாதுகாப்பு உதவியாளர் ஷங்கர் இதுகுறித்து விரிவாக கூறுகையில், “தஞ்சை பெரிய கோயில் 1003ஆம் ஆண்டு ராஜராஜ சோழனால் கட்டுமானம் தொடங்கப்பட்டு 1010ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டு, பின்னர் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
Times of India வெளியிட்டுள்ள செய்தி
ராஜராஜ சோழன் காலத்தில், நன்கொடைகள், நிர்வாகம் மற்றும் அந்தக் காலத்தில் நடந்த பிற முக்கிய விஷயங்களைப் பற்றிய விவரங்களை அவர் கல்வெட்டில் பிராமி எழுத்துக்களில் பொறித்தார். இருப்பினும், அவருக்கு அடுத்தபடியாக வந்த நாயக்கர்கள் பல்வேறு வகையான கலைகளை கோயிலில் வரைந்தனர். மேலும், மராத்தியர்கள் நுழைவாயிலில் கூடுதல் கோபுரத்தை நிறுவினர், இது தற்போது மராத்திய நுழைவாயில் என்று அழைக்கப்படுகிறது, மேலும் கோயிலின் வளாகத்தில் பல்வேறு கட்டமைப்புகளை நிறுவினர்.
அவர்கள் எல்லா விவரங்களையும் தேவநாகரி எழுத்துக்களைப் பயன்படுத்தி எல்லைச் சுவர்களில் பொறித்துள்ளனர். அந்தக் கல்வெட்டுகள் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக கோயிலில் உள்ளன. மராத்தி, தேவநாகரி மற்றும் இந்தி போன்ற அனைத்து எழுத்துகளும் வடிவத்தில் ஒரே மாதிரியானவை. இருப்பினும் அவை இந்தி அல்ல" என்கிறார் சங்கர்.
காணொலியில் காட்டப்பட்டுள்ள கல்வெட்டுகள் கோயில் வளாகத்தில் உள்ள கிரிவலப் பாதையை புதுப்பிக்கும் போது தோண்டப்பட்டவை. அவை கோயிலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றை வீடியோவில் படம்பிடித்த நபர், அவை ஏற்கனவே உள்ள கல்வெட்டுகளை மாற்றத் தயாராக இருப்பதாக தவறாகப் புரிந்து கொண்டதாக அவர் மேலும் தெளிவுப்படுத்தினார்.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் தஞ்சை பெரிய கோயிலில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் மாற்றப்பட்டு இந்தி கல்வெட்டுகள் வைக்கப்படுவதாகவும் அங்கு இந்தி கல்வெட்டுகள் உள்ளதாகவும் வைரலாகும் தகவல் தவறானது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. மேலும், அதில் காண்பிக்கப்படும் எழுத்து மராத்தி என்றும் தெரியவருகிறது.