பிரபல தமிழ் சினிமா நடிகரான சூர்யா தனது குடும்பத்துடன் சமீபத்தில் சென்னையிலிருந்து மும்பைக்கு குடியேறினார். இந்நிலையில், அவர் மும்பையில் உள்ள தனது வீட்டு வாசலில் இந்தியில் பெயர் எழுதியுள்ளதாக சமூக வலைதளங்களில்(Archive link) புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர். அப்புகைப்படத்தில், நடிகர் சூர்யாவின் பின்னால் இருக்கக்கூடிய கட்டிடத்தில் இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது.
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக இந்தி மொழியில் இருக்கக்கூடிய பகுதியை கூகுள் ட்ரான்ஸ்லேட் உதவியுடன் மொழிபெயர்த்தோம். அப்போது, அதில், "Mizu" என்று எழுதப்பட்டிருந்தது. தொடர்ந்து, அப்பெயரைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச்(சர்ச் முடிவு) செய்து பார்த்தபோது, Mizu என்ற பெயரில் மும்பையில் ஒரு உணவகம் இயங்கி வருவது தெரியவந்தது.
மொழிபெயர்க்கப்பட்ட புகைப்படம்
மேலும், யூடியூபில் இது தொடர்பாக தேடுகையில் BollywoodFlash என்ற யூடியூப் சேனல் வைரலாகும் புகைப்படத்தில் இருக்கக்கூடிய உடையுடன் பின்புறத்தில் அதே கட்டிடத்துடன் நடிகர் சூர்யா நடந்து வெளியே வருவது போன்ற ஷார்ட்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது. வீடியோவில் பின்னால் தெளிவாக ஆங்கிலத்திலும் "Mizu" என்றும் கட்டிடத்தின் மேல் பகுதியில் "Modern Izakaya" என்றும் எழுதப்பட்டுள்ளது.
கட்டிடத்தின் மேல் எழுதப்பட்டுள்ள "Modern Izakaya"
இதனைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Architectural Digest என்ற இணையதளம் "மும்பையின் முதல் இசகாயா(Izakaya- பாருடன் கூடிய ஜப்பானிய உணவகம்)" என்ற கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் நடிகர் சூர்யா இருப்பது மும்பையில் இயங்கக்கூடிய Mizu என்ற ஜப்பானிய உணவகம் என்பது உறுதியாகிறது. இதனை உறுதிப்படுத்தும் விதமாக Moviefied என்ற யூடியூப் சேனல், "மும்பை பாந்திராவில் உள்ள Mizu உணவகத்தில் நடிகர் சூர்யா" என்ற ஷார்ட்ஸை வெளியிட்டுள்ளது. அதில், ஒரு பகுதியில் வைரலாகும் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
Conclusion:
இறுதியாக, நடிகர் சூர்யாவின் வீட்டின் வெளியே இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதாக வைரலாகும் புகைப்படத்தில் உண்மை இல்லை என்றும், அது Mizu உணவகத்தின் பெயர் இந்தி மொழியில் எழுதப்பட்டிருப்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.