"உத்தரகண்ட் மாநிலம் தேவதை பூமி இங்கு முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் வாழக்கூடாது. இந்தியா இந்து நாடாக வேண்டும் என ஊடகங்களில் கூறிய மேற்கண்ட சங்கி சாமியார் இலங்கை சொகுசு விடுதியில் விபச்சார அழகிகளுடன் இருந்த போது சிக்கினான்.. இவனை போன்ற கயவர்களை நம்பும் அப்பாவிகளே இனியாவது உணருங்கள்…" என்று சாமியார் ஒருவர் பெண்களுடன் இருக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் காணொலியை ஆய்வு செய்த போது அதில் இலங்கையின் முன்னாள் பிரதமர் ராஜபக்சேவுடன் இந்த நபர் இருப்பது தெரிகிறது. இதனைக் கொண்டு முதற்கட்டமாக இது இலங்கை தொடர்பான சம்பவம் என்பதை கூற முடிகிறது. தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் கடந்த ஜூலை 9ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது.
அதில், "இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு பல்லேகம சுமன தேரர். இவர் இலங்கையில் உள்ள நவகமுக என்னும் பகுதியில் அமைந்துள்ள ஓட்டல் அறை ஒன்றில் தாய் மற்றும் அவரது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். இந்த நிலையில் சுமன தேரர் தங்கி இருந்த அறைக்குள் நுழைந்து 8 பேர் கொண்ட கும்பல் புத்த பிட்சு மற்றும் அங்கிருந்த இரு பெண்களை தாக்கினர். இத்தாக்குதலில் புத்த பிட்சு, மற்றும் இரண்டு பெண்களும் காயமடைந்தனர்.
காயமடைந்த 2 பெண்களும், புத்த பிட்சுவும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மேலும், புத்த பிட்சுவைத் தாக்கிய 8 பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பிட்சு சிங்கள அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து வருகிறாராம். குறிப்பாக ராஜபக்சே, மற்றும் கோத்தபய ராஜ பக்சே ஆகியோருக்கும் நெருக்கமானவராக இவர் இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
ஹிந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் வெளியிட்டுள்ள செய்தி
மேலும், இதே செய்தியை Pathivu என்கிற இலங்கை ஊடகமும் வெளியிட்டுள்ளது. D-Intent Data என்கிற X(Twitter) பக்கமும் காணொலியில் இருப்பது இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு என்று உறுதிபடுத்தியுள்ளது.
D-Intent Dataவின் X(Twitter) பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக இந்திய சாமியார் ஒருவர் இலங்கை சொகுசு விடுதியில் பெண்களுடன் இருந்த போது சிக்கியதாக வைரலாகும் காணொலியில் உண்மை இல்லை என்றும் அதில் இருப்பது இலங்கையைச் சேர்ந்த புத்த பிட்சு என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.