Fact Check: கிறிஸ்தவர்கள் பள்ளியில் இருந்து இந்து சிறுவன் வெளியேற்றிப்பட்டானா?

கோவிலுக்கு மாலை அணிவித்து வந்த இந்து சிறுவனை பள்ளியில் இருந்து வெளியேற்றிய கிறிஸ்தவர்கள் என்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  11 Jan 2025 5:02 PM IST
Fact Check: கிறிஸ்தவர்கள் பள்ளியில் இருந்து இந்து சிறுவன் வெளியேற்றிப்பட்டானா?
Claim: இந்து மாணவனை பள்ளியிலிருந்து வெளியேற்றிய கிறிஸ்தவ ஆசிரியர்கள்
Fact: இந்த தகவல் தவறானது. இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ.

மதவெறுப்புடன் வலதுசாரியினர் பரப்பும் பொய் பிரச்சாரம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. சிறுபான்மையினர் இந்துக்கள் மீது மதவெறுப்புடன் நடந்து கொள்வதாக கூறி பல்வேறு தகவல்களை பரப்பி வருகின்றனர். இந்நிலையில், “பாவாடைகளின் அத்துமீறலை பாருங்கள். சரியான நேரத்தில் களமிறங்கிய பொதுமக்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், St. Sary's High School என்ற கிறிஸ்தவத்தைக் குறிக்கும் பெயர் தாங்கிய பள்ளிக்கு சாமிக்கு மாலை அணிந்துள்ள இந்து சிறுவன் பையுடன் செல்கிறான். பிறகு இரண்டு பெண்கள் அவனை பள்ளிக்கு வெளியே பிடித்து தள்ளுகின்றனர்.

தொடர்ந்து, அப்பகுதி மக்கள் மற்றும் காவல்துறையினர் உதவியுடன் அச்சிறுவன் பள்ளிக்கு செல்வது போன்ற காட்சி பதிவாகியுள்ளது. இதன் மூலம் கிறிஸ்தவ பள்ளி இந்து விரோதமாக நடந்து கொள்வதாக கூறி இக்காணொலியை பகிர்ந்து வருகின்றன.



Fact-check:

நியூஸ் மீட்டர் நடத்திய ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் வைரலாகும் காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது.

இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியை முதலில் ஆய்வு செய்தபோது. அதன் ஒரு பகுதியில் “இக்காணொலி பொழுதுபோக்கிற்காக எடுக்கப்பட்டுள்ளது. இதில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் பொழுதுபோக்கிற்காகவும் கல்வி நோக்கிலும் அமைக்கப்பட்டுள்ளது” என்று பொறுப்பு துறந்துள்ளனர்.


தொடர்ந்து, காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது 3RD EYE என்ற யூடியூப் சேனலில் வைரலாகும் அதே காணொலி கடந்த 28ஆம் தேதி பதிவிடப்பட்டிருந்தது. காணொலியின் டிஷ்கிரிப்ஷன் பகுதியில், “இப்பக்கத்தில் ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நாடகங்கள், பகடிகள் மற்றும் விழிப்புணர்வு காணொலிகள் உள்ளன. இந்த குறும்படங்கள் பொழுதுபோக்கு மற்றும் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளன.


காணொலியில் சித்தரிக்கப்பட்ட அனைத்து கதாபாத்திரங்களும் சூழ்நிலைகளும் கற்பனையானவை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மகிழ்விக்கவும், கல்வி கற்பதையும் நோக்கமாகக் கொண்டவை. இந்தக்காணொலி அனைத்து மதங்களையும் நம்பிக்கைகளையும் மதிக்கிறது. இது கல்வி, விழிப்புணர்வு மற்றும் ஊக்கத்திற்காக உருவாக்கப்பட்டது. இந்தக் காணொலியில் உள்ள கலைஞர்கள் யாருடைய நம்பிக்கையையும் புண்படுத்தவோ அல்லது அவமதிக்கவோ எந்த நோக்கமும் இல்லாமல், கதையை உயிர்ப்பிக்கும் பாத்திரங்களை சித்தரித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


முடிவாக, நம் தேடலில் கிறிஸ்தவர்கள் மதவெறுப்புடன் சாமிக்கு மாலை அணிந்துள்ள இந்து சிறுவனை தங்களது பள்ளிக்குள் அனுமதிக்கவில்லை என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி சித்தரிக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:இந்து மாணவன் ஒருவனை மாலை அணிந்து வந்த காரணத்தால் கிறிஸ்தவ பள்ளியை விட்டு வெளியேற்றியதாக பரவும் செய்தி
Claimed By:Social media user
Claim Reviewed By:Newsmeter
Claim Source:X
Claim Fact Check:False
Fact:இந்த தகவல் தவறானது. இது ஒரு சித்தரிக்கப்பட்ட வீடியோ.
Next Story