"பாகிஸ்தானின் பெஷாவரில் இந்துக்கள் மற்றும் சிறு இந்து குழந்தைகள் அதிர்ச்சியடைந்து எலக்ட்ரிக் ஸ்டன் துப்பாக்கியால் சித்ரவதை செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி இஸ்லாமிற்கு மாற்றப்பட்ட வீடியோவை பாருங்கள். இந்துக்களாகிய உங்களை எப்படி கையாள்வது என்று பல வருடங்களுக்கு முன்பே முஸ்லிம் ஜிகாதிகள் முடிவு செய்துவிட்டனர்.
வைரலாகும் காணொலி
இப்படி மதச்சார்பின்மையாகத் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களில் இந்த ஜிகாதி மதகுருமார்களின் கைகளில் உங்கள் பேரக்குழந்தைகள் கிடப்பதைப் பார்ப்பீர்கள், உங்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.இதை தடுக்காவிடில், நமது அடுத்த தலைமுறையும் ரத்தக் கண்ணீரைத் துடைத்து, இதே நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்." என்ற கேப்ஷனுடன் 2 நிமிடமும் 20 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பாகிஸ்தானில் கடத்தப்பட்ட மைனர் இந்து பெண் ஒருவர் வலுக்கட்டாயமாக இஸ்லாமிற்கு மாற்றப்பட்டதாக ஏற்கனவே இதே காணொலி பாகிஸ்தானில் வைரலானது தெரியவந்தது. தொடர்ந்து தேடுகையில், "மின்சாரத்தைக் கொண்டு குழந்தைகளுக்கு பேய் ஓட்டிய போலி மந்திரவாதியை பெஷாவர் காவல்துறையினர் கைது செய்தனர்" என்று ஆகஸ்ட் 10ஆம் தேதி 2020ஆம் ஆண்டு துனியாநியூஸ் உருது மொழியில் செய்தி வெளியிட்டுள்ளது.
அதேபோன்று, இன்டிபென்டன்ட் ஊடகம் ஏப்ரல் 27ஆம் தேதி 2021ஆம் ஆண்டு உருது மொழியில் வெளியிட்டுள்ள செய்தியில், "ஜின்களை(பேய்) விரட்டுவதாகக் கூறி மின்சார ஸ்டன் கன்னைக் கொண்டு மக்களுக்கு மின்சாரம் கொடுத்த முஹம்மதுல்லா மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்ததாகவும், பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பெஷாவர் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அங்கு அவர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
முஹம்மதுல்லா மீது வழக்குப் பதிவு செய்த ஏஎஸ்ஐ சோஹைல் கான், "ஹாஜி முஹம்மதுல்லா அப்ரிடி நீண்ட காலமாக போலியாக எளிய மக்களை மிரட்டி பணம் பறிப்பதாக புகார்கள் வந்தன ஜின்(பேய்) விரட்டுகிறோம் என்ற பெயரில் மின்சாரம் கொடுத்து சித்ரவதை செய்துள்ளார்" என்றார்." என்று கூறப்பட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக, போலி மந்திரவாதியின் கைது குறித்து தகவல்களை பெஷாவர் காவல்துறை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 9ஆம் தேதி 2020ஆம் ஆண்டு பதிவிட்டுள்ளது. மேலும், போலி மந்திரவாதி முஹம்மதுல்லாவின் ஃபேஸ்புக் பக்கத்தை ஆய்வு செய்ததில் பேய் ஓட்டுவது போன்ற பல்வேறு காணொலிகளை பதிவிட்டுள்ளார்.
பெஷாவர் காவல்துறையின் டுவிட்டர் பதிவு
Conclusion:
நமது தேடலின் முடிவாக இந்துக்கள் மற்றும் இந்து குழந்தைகளை எலக்ட்ரிக் ஸ்டன் கன்னால் சித்ரவதை செய்து கட்டாயப்படுத்தி இஸ்லாமிற்கு மாற்றப்படுவதாக கூறி பரப்பப்படும் காணொலியில் உண்மை இல்லை. உண்மையில், அக்காணொலியில் இருப்பது போலி மந்திரவாதி. எலக்ட்ரிக் ஸ்டன் கன்னைக் கொண்டு பேய் ஓட்டியதற்காக அந்நாட்டு காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடியாது.