“ஆப்பிரிக்காவில் வாழ்ந்த நீளகழுத்து மனிதர்கள்.... இவர்கள் அரியவகை இனம்... மிகவும் நல்லவர்கள்....இவர்கள் ஒரு அற்புதமான மனிதர்கள்…” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. அதில், சிலருக்கு நீளமான கழுத்து இருப்பது போன்றும் நீள கழுத்துடைய எழும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது போன்றும் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இப்புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்பது தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய முதலில் உலகின் மிக நீளமான கழுத்தைக் கொண்டவர்கள் குறித்து தேடினோம். அப்போது, இதுகுறித்து கின்னஸ் உலக சாதனை இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.
கின்னஸ் சாதனை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள தகவல்
அதில், “வடமேற்கு தாய்லாந்து மற்றும் தென்கிழக்கு மியான்மரின் மலைப்பகுதிகளில் வசிக்கும் படாங் (அல்லது கயான்) பழங்குடியின பெண்களிடையே மிக நீளமான கழுத்து காணப்படுகிறது. படாங் இன பெண்கள் கழுத்து மற்றும் தோள்பட்டையின் வடிவத்தை மாற்றும் வகையில் கனமான பித்தளை வளையங்களால் தங்கள் கழுத்தை பிணைக்கின்றனர்.
2018ஆம் ஆண்டில் ஓட்சுமா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இந்த வளையங்கள் கழுத்தின் நீளத்தை 19.7 சென்டிமீட்டர் (7.75 இன்ச்) அளவிற்கு அதிகரித்துள்ளதாக தெரிகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் உலகின் மிக நீள கழுத்தின் அளவு 19.7 சென்டிமீட்டர் என்று தெரியவருகிறது.
தொடர்ந்து, வைரலாகும் புகைப்படங்களை Truemedia (Photo 1, Photo 2, Photo 3) இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் அவை AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டிருப்பது பெரிய வந்தது. அதேபோன்று, Hive Moderation இணையதளமும் புகைப்படங்கள் 90.5 விழுக்காடு AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்ற முடிவை தந்தன.
Hive Moderation முடிவுகள்
Conclusion:
நம் தேடலில் முடிவாக மிக நீண்ட கழுத்துடன் வாழ்ந்த ஆப்பிரிக்க மனிதர்கள் என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டவை என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.