தூத்துக்குடி கடலில் மனித உருவத்தில் மீன் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி ஒன்று வைரலாகி வருகிறது. அதில், பெண் உருவில் இருக்கும் மீன் போன்ற ஒரு உயிரினத்தை படகில் பலரும் சேர்ந்து ஏற்றுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் தெரியவந்தது. இதன் உண்மைத் தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, voidstomper என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. அதோடு, கடலில் பல்வேறு வகையான மிருகங்கள் இருப்பது போன்றும் பல காணொலிகள் அத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளன.
தொடர்ந்து, அப்பக்கத்தை ஆய்வு செய்ததில் அதன் பயோ பகுதியில், “aivideo.com என்ற இணையதளத்தில் AI தொழில்நுட்பத்தால் வைரல் காணொலிகளை உருவாக்கிக் கொள்ளுங்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைக் கொண்டு அத்தளத்தில் இருக்கக்கூடிய அனைத்து காணொலிகளும் aivideo என்ற இணையதளத்தில் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது. அதேசமயம் வைரலாகும் காணெலியை True Media இணையதளத்தில் பதிவேற்றி ஆய்வு செய்ததில் அக்காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பது தெரியவந்தது.
மேலும் AI தொழில்நுட்பத்தால் இதுபோன்ற காணொலிகளை உருவாக்க முடியுமா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்து பார்த்தபோது Ed Tracy என்பவர் AI தொழில்நுட்பத்தைக் கொண்டு இயக்கிய ஆவணப்படம் ஒன்று reddit தளத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதிலும், கடலில் விநோத பூதங்கள் இருப்பது போன்று உருவாக்கப்பட்டிருந்தது.
Conclusion:
முடிவாக நம் தேடலில் தூத்துக்குடி கடலில் மனித உருவில் மீன் கண்டெடுக்கப்பட்டதாக வைரலாகும் காணொலி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.