"வட மாநிலங்களில் முஸ்லிம்களை சங்கிகள் தாக்கி அவர்களின் சொத்துக்களை சூரையாடும் இந்த காலச்சூழலில்… நடிகர் ரஜினிகாந்த் ஒரு தெளிவான வரலாற்று உண்மையை இந்திய முஸ்லிம்களை பற்றி தெரிவித்து இருப்பது வரவேற்கத் தக்கது." என்ற கேப்ஷனுடன் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்திக்கும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
அதில், "இஸ்லாமியர்களுக்கு இது ஒரு பெரிய அச்சுறுத்தல் என்று பீதியை கிளப்பிவிட்டுள்ளனர். அவர்களுக்கு இந்த நாட்டில் எந்த அளவிற்கு உரிமை உள்ளது என்று சொன்னால், பிரிவினை காலத்தில் இஸ்லாமியர்கள் பாகிஸ்தானிற்கு செல்ல வேண்டும் என்று கூறப்பட்ட போது சிலர் பாகிஸ்தானிற்கு சென்றனர். ஆனால், இங்குள்ள இஸ்லாமியர்கள் இதுதான் நம் நாடு, வாழ்வு, சாவு எல்லாமே இங்கு தான் என்று எண்ணத்தோடு வாழ்பவர்கள்.
இவர்களை எப்படி இந்நாட்டை விட்டு வெளியே அனுப்புவீர்கள், அது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டால் ரஜினிகாந்த் அவர்களுக்காக குரல் கொடுப்பேன். சில அரசியல் கட்சிகளும், மதகுருக்களும் அரசியல் சுயலாபத்திற்காக அவர்களை தூண்டி விடுகின்றனர்" என்றார். மணிப்பூர் , ஹரியானா போன்ற மாநிலங்களில் கலவரம் ஏற்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார் என்று இக்காணொலியைப் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக, இது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 5ஆம் தேதி பிபிசி தமிழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவை குறித்து ரஜினிகாந்த் இதுவரை எதுவும் பேசவில்லை என்று அவர் மீது வைக்கப்படும் விமர்சனம் குறித்து அவரிடம் செய்தியாளர்கள் இன்று கேள்வி எழுப்பியபோது ரஜினிகாந்த் இவ்வாறு தெரிவித்தார்" என்று வைரலாகும் காணொலியில் ரஜனிகாந்த் பேசியிருந்தது விரிவாக எழுதப்பட்டிருந்தது.
மேலும், அதே தேதியில் வைரலாகும் காணொலியின் முழு நீளக் காணொலியை "இந்திய இஸ்லாமியர்களை வெளியேற்றினால் முதலில் குரல் கொடுப்பேன் - ரஜினிகாந்த் | Rajinikanth | NPR | CAA" என்ற தலைப்பில் நியூஸ் 18 தமிழ்நாடு தனது யூடியூப் சேனலில் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கூறப்பட்டுள்ள செய்தியே அக்காணொலியில் பதிவாகி உள்ளது. இதே செய்தியை புதியதலைமுறை உள்ளிட்ட பல்வேறு ஊடகங்களும் வெளியிட்டுள்ளன.
நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்டுள்ள செய்தி
Conclusion:
நமது தேடலின் முடிவாக, "இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பேன்" என்று ரஜினிகாந்த் கூறியது குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக இஸ்லாமியர்கள் 2020ஆம் ஆண்டு போராடிய போது கூறிய கருத்து என்பதும் அக்கருத்தை தற்போது கூறியது போன்று தவறாக பரப்பி வருகின்றனர் என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.