“சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தேர்தலில் இந்தியாவுக்கு மிகப்பெரிய வெற்றி. இந்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த நீதிபதி தல்வீர் பண்டாரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்தியாவின் நீதிபதி தல்வீர் சிங் 193 வாக்குகளில் 183 வாக்குகளைப் பெற்றார் (ஒவ்வொரு நாட்டிலிருந்தும் ஒருவர்) பிரிட்டனின் நீதிபதி கிறிஸ்டோபர் கிரீன்வுட்டை தோற்கடித்தார். பட்டத்தில் பிரிட்டனின் 71 ஆண்டுகால ஏகபோகத்தை முறியடித்தார்…” என்றும் இந்த வெற்றிக்கெல்லாம் காரணம் பிரதமர் மோடியும் அவரது சாணக்கிய தனமும் என்று கூறி சமூக வலைதளங்களில் (Archive) தகவல் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் சர்வதேச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கான பதவியே கிடையாது என்றும் தெரியவந்தது.
இதுகுறித்த உண்மை தன்மையை கண்டறிய வைரலாகும் தகவல் தொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2017ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி புதிய தலைமுறை இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, “நெதர்லாந்து நாட்டில் செயல்பட்டு வரும் சர்வதேச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும் இந்தத் தேர்தலில், ஐ.நா. பொதுசபையில் உள்ள 193 உறுப்பு நாடுகளும் ஐ.நா. பாதுகாப்பு சபையில் உள்ள 15 உறுப்பு நாடுகளும் வாக்களித்து நீதிபதிகளை தேர்வு செய்யும். இந்த ஆண்டு இந்த தேர்தல் நடந்தது. இதில் பிரேசில், லெபனான், பிரான்ஸ், சோமாலியா நாடுகளில் இருந்து தலா ஒரு நீதிபதி தேர்வு செய்யப்பட்டார். மிச்சமுள்ள ஒரு நீதிபதி இடத்துக்கு சர்வதேச நீதிமன்றத்தில் ஏற்கனவே நீதிபதியாக உள்ள இந்தியர் தல்வீர் பண்டாரியை இந்தியா மீண்டும் வேட்பாளராக அறிவித்தது.
புதிய தலைமுறை வெளியிட்டுள்ள செய்தி
இந்தப் போட்டியில் பிரிட்டனைச் சேர்ந்த கிரீன் உட்டும் இருந்தார். கடைசி நேரத்தில் கிரீன் உட் வாபஸ் பெற்றதால் தல்வீர் பண்டாரிக்கு ஐ.நா. பொது சபையில் 193 வாக்குகளில் 183 வாக்குகள் கிடைத்தது. இதையடுத்து அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாகிஸ்தான், குல்புஷன் யாதவுக்கு மரண தண்டனை விதித்த விவகாரம் சர்வதேச நீதிமன்றத்தில் உள்ள நிலையில் இவர் மீண்டும் தேர்வாகியுள்ளார். சர்வதேச நீதிமன்றத்துக்கு செல்லும் முன் இந்தியாவின் உச்சநீதிமன்ற நீதிபதியாக தல்வீர் பண்டாரி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், இவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார் என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் தெரியவருகிறது. அதேசமயம், இந்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி என்ற பதவி கிடையாது மாறாக தலைவர் பதவி உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் படி இதன் தலைவராக லெபனானைச் சேர்ந்த நவாஃப் சலாம் என்பவரும் துணை தலைவராக உகாண்டாவைச் சேர்ந்த ஜூலியா செபுடிண்டேவும் உள்ளனர் என்பது தெரியவந்தது. மேலும், தலைவராக இருந்த நவாஃப் சலாம் ராஜினாமா செய்ததை அடுத்து பொறுப்பு தலைவராக ஜூலியா செபுடிண்டே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதியாக உள்ள தல்வீர் பண்டாரி
Conclusion:
முடிவாக, நம் தேடலில் சர்வதேச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்தியாவைச் சேர்ந்த தல்வீர் சிங் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அவர் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் சர்வதேச நீதிமன்றத்தின் நீதிபதியாக உள்ளார் என்றும் தெரியவந்தது. மேலும், சர்வதேச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவியே இல்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.