இந்திய நாட்டின் பாஸ்போர்ட்டின் முகப்பில் Passport மற்றும் Republic of India ஆகிய வார்த்தைகள் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்டிருக்கும். இந்நிலையில், கன்னட மொழியில் இந்த இரண்டு வார்த்தைகளும் எழுதப்பட்டுள்ளதாக கூறி சமூக வலைதளங்களில் (Archive) புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. “அட நாதியற்ற தமிழனே, தமிழ்மொழி கண்ணெதிரே அழிக்கப்படுகிறதே உன் தமிழுணர்வு எங்கே செத்துபோனதா?” என்ற கேப்ஷனுடன் இத்தகவல் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்றும் உண்மையில் இவ்வாறாக கன்னட மொழியில் எழுத முடியாது என்பதும் தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையை கண்டறிய இதுதொடர்பாக கூகுளில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, பாஸ்போர்ட்டில் உள்ள அனைத்து தகவல்களும் இந்தி மற்றும் கன்னடத்தில் இருக்கு வேண்டும் என்று கன்னட வளர்ச்சி ஆணையத்தின் (Kannada Development Authority) தலைவரான எஸ்.ஜி. சித்தராமையா தெரிவித்துள்ளதாக The News Minute 2018ஆம் ஆண்டு மார்ச் 22ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், இது நடைமுறைப்படுத்தப்பட்டதாக எந்த ஒரு செய்தியோ தகவலோ இல்லை.
The News Minute வெளியிட்டுள்ள செய்தி
தொடர்ந்து, தேடுகையில் ராஜ்ய சபாவில் எம்பி கனிமொழி பாஸ்போர்ட்டில் ஹிந்தி மொழி குறித்து 2018ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி மூன்று கேள்விகளை எழுப்பினார். இதற்கு அன்றைய வெளியுறவுத்துறையின் இணை அமைச்சரான எம்.ஜே. அக்பர் பதிலளித்தார்.
கேள்வி: பாஸ்போர்ட் ஆங்கிலம் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளில் மட்டுமே அச்சிடப்படுவது ஏன்?
பதில்: ஆம், ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் மட்டுமே பாஸ்போர்ட் அச்சிடப்படுகிறது. பாஸ்போர்ட்டில் உள்ள தனிப்பட்ட விவரங்கள் ஆங்கிலத்தில் இருந்தன. இனி அந்த தகவல்களும் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் அச்சிட அரசு முடிவு செய்துள்ளது.
கேள்வி: அதற்கு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா ?
பதில்: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மட்டும் பாஸ்போர்ட்டில் அச்சிடுவதற்கு காரணம் ஹிந்தி இந்தியாவின் அலுவல் மொழி.
கேள்வி: ஹிந்தி தெரியாத மாநிலங்களில் உள்ள மக்கள் அவர்களின் மாநில மொழிகளில் தேர்ந்தெடுக்கலாம் தானே ?
பதில்: ஹிந்தி தெரியாத மாநிலங்களுக்காக ஆங்கிலம் இடம்பெறுகிறது. மாநில மொழிகளில் அச்சிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
இவ்வாறாக அமைச்சர் பதிலளித்துள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக கன்னட மொழியில் இந்திய பாஸ்போர்ட் வெளியிட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் பாஸ்போர்ட்டில் மாநில மொழிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை என வெளியுறவுத்துறை சார்பிலே தெரிவிக்கப்பட்டுள்ளது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.