ராணுவ வீரர் ஒருவர் ஜெட் பேக் எனும் நவீன பறக்கும் கருவியின் உதவியோடு கடற்படை கப்பலின் மேல் பறந்து பயிற்சியில் ஈடுபடுவது போன்ற காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. காணொலியில் இருக்கும் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவ வீரர்கள் என்று கூறி இதனை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் 2021ஆம் ஆண்டு பிரிட்டனின் ராயல் மரைன்கள் ஜெட் பேக் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, 2021ஆம் ஆண்டு மே 6ஆம் தேதி Metro ஊடகம் வைரலாகும் காணொலியுடன் செய்து வெளியிட்டிருந்தது. அதில், “ராயல் மரைன்கள் திறந்தவெளியில் கடற்படை போர்க்கப்பலில் ஏற ஜெட் பேக்கைப் பயன்படுத்தும் காணொலி வெளியாகியுள்ளது.
Metro ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி
இங்கிலாந்தை தளமாகக் கொண்ட கிராவிட்டி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த 'ஜெட் சூட்' VBSS (Visit, Board, Search, Seizure) பயிற்சி நடவடிக்கையின் ஒரு பகுதியாகப் பயன்படுத்தப்பட்டது. காணொலியில், கிராவிட்டி நிறுவனத்தின் விமானிகளில் ஒருவர், ராயல் நேவி பேட்ச் 2 ரிவர்-கிளாஸ் ஆஃப்ஷோர் ரோந்து கப்பலான HMS டமரில் (Tamar) தரையிறங்க மற்றொரு சிறிய ரக படகில் இருந்து புறப்படுகிறார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், The Guardian வெளியிட்டுள்ள செய்தியின்படி, இங்கிலாந்தின் தெற்கு கடற்கரையில் 42 கமாண்டோ ராயல் மரைன்களுடன் மூன்று நாட்கள் சேதனை முயற்சியில் ஈடுபட்டதாக கிராவிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. The Sun ஊடகமும் 2021ஆம் ஆண்டு மே 5ஆம் தேதி வைரலாகும் காணொலியுடன் அதே செய்தியை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இந்திய ராணுவ வீரர்கள் ஜெட் பேக் எனும் நவீன பறக்கும் கருவியைப் பயன்படுத்தி ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதாக வைரலாகும் காணொலி உண்மையில் பிரிட்டனின் ராயல் மரைன் ஜெட் பேக் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.