அமெரிக்க அதிபராக 2வது முறையாக பதவியேற்ற டிரம்ப் சட்டவிரோதமாக குடியேறியுள்ள வெளிநாட்டினரை அவர்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வருகிறார். இதனையடுத்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்களில் முதல்கட்டமாக 205 பேரை இன்று (பிப்ரவரி 5) ராணுவ விமானத்தில் அந்நாடு திருப்பி அனுப்பி உள்ளது.
இந்நிலையில், “இந்தியாவை இதை விட வேறு எந்த நாடும் கேவலப்படுத்த முடியாது.... சட்டவிரோத இந்திய குடியேற்றிகளை கைவிலங்கிட்டு தீவிரவாதிகளை போல் நடத்தும் டிரம்பின் இந்த நடைமுறை ஒட்டு மொத்த இந்தியர்களுக்கே தலைகுனிவு..” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், சிலர் விலங்கிடப்பட்டு ராணுவ விமானங்களில் ஏற்றப்படும் காட்சி பதிவாகியுள்ளது. இவர்கள் இந்தியர்கள் என்று கூறி பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ்மீட்டர் நடத்திய ஆய்வில் காணொலியில் இருப்பவர்கள் இந்தியர்கள் இல்லை என்று தெரியவந்தது.
காணொலியின் உண்மைத் தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, வைரலாகும் அதே காணொலி ANC 24/7 என்ற ஊடகத்தில் கடந்த ஜனவரி 28ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்தது. இதனைக் கொண்டு இது பழைய காணொலி என்று தெரியவந்தது.
கிடைத்த தகவலைக் கொண்டு தொடர்ந்து தேடுகையில் கடந்த ஜனவரி 24ஆம் தேதி நியூயார்க் போஸ்ட் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, இரண்டு C-17 குளோப்மாஸ்டர் III விமானங்கள் குவாத்தமாலாவிற்கு புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்றதாக பாதுகாப்பு அதிகாரிகள் ABC ஊடகத்திடம் தெரிவித்துள்ளனர். NBC ஊடகத்தின் படி, 31 பெண்கள் மற்றும் 48 ஆண்கள் உட்பட 79 குவாத்தமாலா மக்கள் நாடு திரும்பியதாக குவாத்தமாலா இடம்பெயர்வு நிறுவனம் அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக வெள்ளை மாளிகையின் ஊடக செயலர் கரோலின் லீவிட், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தால், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கடந்த ஜனவரி 24ஆம் தேதி எக்ஸ் தளத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதிலுள்ள நபரின் ஆடையும் வைரலாகும் காணொலியில் இருக்கும் நபரின் ஆடையும் ஒன்றாக இருப்பதை நம்மால் காணமுடிகிறது.
முடிவாக, நம் தேடலில் கைவிலங்கிடப்பட்டு அமெரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட சட்ட விரோதமாக குடியேரிய இந்தியர்கள் என்று வைரலாகும் காணொலியில் இருப்பது குவாத்தமாலாவைச் சேர்ந்த சட்டவிரோத குடியேறிரிகள் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.