"சொரியாரியான் பேத்தி மப்பு மண்டைக்கேறி அலப்பறை காட்சி. இந்த வீடியோவை, சனாதனத்தை வேறருப்போம் ஒழிப்போம் அழிப்போம் என்று கூறிக் கொண்டிருக்கின்றவர்களுக்கு காணிக்கையாக்குகிறேன்" என்ற கேப்ஷனுடன் காணொலி ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், மயக்க நிலையில் இருக்கும் பெண் ஒருவர் காவலர்களிடம் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது. இச்சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெற்றது போன்று பரப்பப்படுகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, இந்தியா டுடே ஊடகம் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, "செப்டம்பர் 1 ஆம் தேதி மங்களூருவில் உள்ள மருந்தகத்தில் ஒரு பெண் காவல்துறையினரிடம் தவறாக நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது. அவரது அசாதாரணமான மற்றும் ஆக்ரோஷமான நடத்தை காரணமாக, அவர் குடிபோதையில் அல்லது போதையில் இருந்ததாகக் கருதப்படுகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இது குறித்து நியூஸ் 18 வெளியிட்டுள்ள செய்தியின்படி, "மங்களூர் நகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அப்பெண்ணுக்கு மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சோதனையின் முடிவு நெகட்டிவ் என்று வந்ததாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பின்னர் அப்பெண் பெற்றாரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவரது ஆக்ரோஷமான நடத்தைக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. கலால் அதிகாரிகளிடம் அப்பெண் ஆத்திரமூட்டும் விதமாகவும் நடந்து கொண்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது" என்று கூறப்பட்டுள்ளது.
மங்களூர் காவல்துறையின் ஃபேஸ்புக் பதிவு
Conclusion:
நம் தேடலில் முடிவாக தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் போதையில் அலப்பறையில் ஈடுபடுவதாக வைரலாகும் காணொலி உண்மையில் கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடைபெற்றது என்றும் அப்பெண் போதைப் பொருள் ஏதும் எடுத்துக்கொள்ளவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.