அரசுமுறை பயணமாக ஐந்து நாட்கள் அமெரிக்கா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி. அதன்படி கடந்த ஜூன் 20 முதல் ஜூன் 23 வரை அமெரிக்காவில் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிருந்தார். அச்சமயம் தொழிலதிபரும் டுவிட்டா் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்கை சந்தித்து பேசினார். இந்நிலையில், "தீவிர சனாதன சங்கி எலோன் மஸ்க்." என்ற கேப்ஷனுடன் எலான் மஸ்க் காவி உடையில் இருக்கும் புகைப்படத்தை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.
Fact-check:
இப்புகைப்படத்தின் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக, முதலில் எலான் மஸ்க் இதுபோன்ற புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளாரா என்று தேடிய போது அவ்வாறாக எந்த புகைப்படமும் அவரது டுவிட்டர் பக்கத்தில் இல்லை என்பது தெரியவந்தது. தொடர்ந்து, புகைப்படத்தில் இருந்த "HOKAGEMODISAMA" என்ற வாட்டர் மார்க்கை கூகுளில் தேடினோம்.
அப்போது, "Modi Sama" என்ற பெயரில் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று கிடைத்தது. அதில், தனது பயோவில் "Hindu AI Artist" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 21ஆம் தேதி வைரலாகும் எலான் மஸ்கின் புகைப்படத்தை "#midjourney #aiart #aiartwork" போன்ற ஹேஷ்டாக்குகளுடன் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று நம்மால் முதற்கட்டமாக கூற முடிகிறது.
மேலும், இப்புகைப்படத்தை ஹைவ் மாடரேஷன் என்ற AI புகைப்படங்களை கண்டறியும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தபோது, 77 விழுக்காடு இது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்று முடிவு கிடைத்தது. இவற்றைக் கொண்டு வைரலாகும் புகைப்படம் AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் உறுதிப்படுத்த முடிந்தது.
ஹைவ் மாடரேஷன் ஆய்வு முடிவு
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கக்கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் காவி உடை அணிந்திருக்கும் எலான் மஸ்கின் புகைப்படம் உண்மை இல்லை என்றும் அது AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.