"அவசரம் !!!! அவசரம்!!!!... யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவ கல்லூரியில் இருந்து வருகிறோம் உங்களுக்கு இலவசமாக சுகர்(நீரிழிவு நோய்க்கான) டெஸ்ட் செய்கிறோம் எனக் கூறினால், அவர்களை அடித்து விரட்டுங்கள் அல்லது காவல்துறையிடம் புகார் அளியுங்கள். அவர்கள் இந்து ஆர்.எஸ்.எஸ் (RSS) தீவிரவாத அமைப்பினால் எய்ட்ஸ் வைரஸை பரப்ப அனுப்பப்பட்டவர்கள். வீட்டில் உள்ளவர்கள் அன்பர்கள் நண்பர்கள் அனைவருக்கும் வந்தபடியே பகிர்ந்து கொள்ளுங்கள் இப்படிக்கு காவல்துறை" என்று பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் தளங்களில் ஒரு தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
பேஸ்புக்கில் வைரலாகும் இச்செய்திகளைக் காண இந்த லிங்குகளில் கிளிக் செய்யவும் (பதிவு 1(Facebook Link 1), பதிவு 2(Facebook Link 2))
Fact-check:
பகிரப்பட்டு வரும் இத்தகவல் குறித்த உண்மைத் தன்மையைக் கண்டறிய கூகுளில் இப் புகைப்படத்தை பதிவேற்றி ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம், அதன் மூலம் ஏற்கனவே கடந்த 2010-ம் ஆண்டு, "ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் எயிட்ஸை உருவாக்கும் எச்ஐவி வைரஸை பரப்புவதாக" தகவல் ஒன்று வைரலானது தெரியவந்தது. மேலும், அத்தகவலும் பொய் என்று தமிழ்நாடு காவல்துறை தனது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து இருந்தது (இங்கே கிளிக் செய்து அத்தகவலை பார்த்துக்கொள்ளலாம்). தொடர்ந்து, தற்போது பகிரப்பட்டு வரும் இத்தகவல் உண்மைதானா எனக் கண்டறிய தமிழ்நாடு காவல்துறையின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தை ஆய்வு செய்தோம். அதில், இச்செய்தி போலியானது என்றும் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று, தமிழக காவல்துறையின் பேஸ்புக் பக்கங்களை ஆய்வு செய்த போது அதில், செங்கல்பட்டு மற்றும் அரியலூர் மாவட்ட காவல்துறையினரும் இந்த தகவல் போலியாக பகிரப்பட்டு வருவதை உறுதி செய்து பதிவு செய்து இருந்தனர்.
Conclusion:
நியூஸ்மிட்டரின் இந்த ஆய்வின் மூலம் தற்போது பகிரப்பட்டு வரும் இத்தகவலானது போலியானது என்பதை நம்மால் ஆதாரத்துடன் நிரூபிக்க முடிகிறது.