பாரதியார் நினைவு நாளில் ஏற்பட்டுள்ள குழப்பம்; உண்மை என்ன?
பாரதியாரின் நினைவு நாள் செப்டம்பர் 11-ம் தேதியா அல்லது 12-ம் தேதியா என்ற குழப்பம் எழுந்துள்ளது. மேலும், அவருடைய இறப்புச் சான்றிதழும் பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் பரவி வருகிறது.
By Ahamed Ali Published on 17 Sept 2022 10:28 AM ISTதமிழ் கவிஞர்கள் மற்றும் எழுத்தாளர்களில் மிக முக்கியமானவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார். இவரது நினைவு நாள் ஆண்டுதோறும் செப்டம்பர் 11-ம் தேதி அனுசரிக்கப்படுகிறது. இந்நிலையில், இவரது நினைவு நாள் 'மகாகவி நாளாக' அரசு சார்பில் கொண்டாடப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு அறிவித்தார். அதன்படி இந்த ஆண்டு மகாகவி நாள் கொண்டாடப்பட்டது. இச்சூழலில், பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கடந்த செப்டம்பர் 12-ம் தேதி பாரதியாரின் நினைவு நாள் என்று டுவிட்டரில் பதிவிட்டு இருந்தார்.
அண்ணாமலை பதிவிட்ட டுவீட்
அரசே 11-ம் தேதி நினைவு நாள் அனுசரித்து வரும் சூழலில் அண்ணாமலை போட்ட இந்த டுவீட் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும், அண்ணாமலையின் பதிவிற்கு வலுச்சேர்க்கும் வகையிலும், பாரதியாரின் நினைவு நாள் 12-ம் தேதி தான் என்றும் அவரது இறப்புச் சான்றிதழ் ஒன்று டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
Fact-check:
சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் பாரதியாரின் இறப்புச் சான்றிதழின் உண்மைத் தன்மையைக் கண்டறிய, இறப்புச் சான்றிதழை போட்டோ போரன்சிக்(Photo Forensic) முறையில் ஆய்வு செய்ததில் புகைப்படம் எடிட் செய்யப்படவில்லை என்பது உறுதியானது. மேலும், அந்தப் புகைப்படத்தைக் கொண்டு ரிவர்ஸ் இமேஜ் சர்ச்(Reverse Image Search) செய்து பார்த்த போது, டிடி நெக்ஸ்ட் என்ற ஆங்கில செய்தித்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. அதில், கோவில்பட்டி பாரதி நினைவு அறக்கட்டளையின் நிறுவனர் முத்துமுருகன் கூறுகையில், "கடந்த சில ஆண்டுகளாக பாரதியின் நினைவுநாள் செப்டம்பர் 11-ம் தேதியா அல்லது 12-ம் தேதியா என்ற பிரச்சினை இருந்து வருகிறது. பின்னர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பாரதியாரின் இறப்புச் சான்றிதழைப் பெற்றோம்" என்றார். மேலும், "எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் நினைவிடத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா கல் பலகையைத் திறந்து வைத்தார். அதில், பாரதி இறந்த தேதி செப்டம்பர் 12 என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது" என்றும் முத்துமுருகன் கூறினார். நியூஸ்மீட்டருக்காக முத்துமுருகனிடம் பேசினோம், அவர், ''1921, செப்டம்பர் 11-ம் தேதி நள்ளிரவு 1.30 மணிக்கு பாரதி மறைந்ததால், அது 12-ம் தேதியாகி விடுகிறது. எனவே பாரதியார் நினைவுநாள் செப்டம்பர் 12-ம் தேதிதான். கடந்த சில ஆண்டுகளாக செப்டம்பர் 12-ம் தேதியில்தான் பாரதியின் நினைவு தினத்தை எட்டயபுரத்தில் அனுசரித்து வருகிறோம்" என்றார்.
பகிரப்பட்ட இறப்புச் சான்றிதழ்
மேலும், பாரதியின் இறப்பு தேதியை உறுதிப்படுத்த பெருநகர சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம் செய்தோம். அதில், பாரதி இறந்தது 1921-ம் ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்மூலம் இறப்புச் சான்றிதழ் உண்மையானது என நம்மால் அறிய முடிகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட இறப்புச் சான்றிதழ்
Conclusion:
நியூஸ் மீட்டரின் ஆய்வின் மூலம் டுவிட்டர், பேஸ்புக் தலங்களில் பகிரப்பட்டு வந்த சுப்பிரமணிய பாரதியாரின் இறப்புச் சான்றிதழ் உண்மையானது என்றும் அவரது இறந்த தேதி செப்டம்பர் 12 என்றும் நம்மால் உறுதியாகக் கூற முடியும்.