விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் விரைவில் வெளிவருவார் என்று கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், பிரபாகரன் தொடர்பான பொய் செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இச்சூழலில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலாட்டா செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள நேர்காணலில், பிரபாகரனின் புகைப்படத்தை காட்டி இவர் குறித்து என்ன கூற விரும்புகிறீர்கள் என்று நெறியாளர் சீமானிடம் கேட்டதும், "காலை நேரங்களில் என் நெஞ்சில் படுத்து தூங்குவார்" என்று சீமான் பதில் அளிப்பது போன்ற 26 வினாடிகள் ஓடக்கூடிய காணொலி
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக கலாட்டா நிறுவனத்திற்கு சீமான் அளித்த நேர்காணல் குறித்து யூடியூபில் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு மார்ச் 28ஆம் தேதி கலாட்டா யூடியூப் சேனலில் 16 நிமிடங்கள் 34 விநாடிகள் ஓடக்கூடிய நேர்காணலின்
முழு நீள காணொலி கிடைத்தது. அதனை ஆராய்ந்த போது, காணொலியின் 8:48 முதல் 10:44 வரையிலான பகுதியில் சீமானிடம், பிரபாகரன் குறித்து நெறியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு, "அவர் என் அண்ணன், என் இனத்தின் அடையாளம், ஒழுக்கத்தில் சிறந்தவர், அனைவருடனும் மரியாதையுடன் பேசுபவர், அவருடன் பேசினால் அவருக்காக உயிரையும் கொடுக்க தோன்றும்.." என்று பதிலளித்துள்ளார்.
பிரபாகரன் குறித்து பதிலளித்த சீமான்
மேலும், 5:43 முதல் 06:07 வரையிலான பகுதியில் சீமானிடம் நெறியாளர் அவரது மகன் குறித்து எழுப்பிய கேள்விக்கு, "காலை நேரங்களில் என் நெஞ்சில் படுத்து தூங்குவார், அதை தவற விடுகிறேன்" என்று பதிலளித்துள்ளார்
தனது மகன் குறித்து பேசிய சீமான்
Conclusion:
இறுதியாக, சீமான் தனது மகன் குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளித்த பதிலை பிரபாகரனின் கேள்விக்கான பதிலாக எடிட் செய்து காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.