"ஏன் பொது சிவில் சட்டம் தேவை..இதோ மனைவி1,மனைவி 2, மனைவி 3, மனைவி 4 ஆகியோர் ஒருவரை ஒருவர் தாக்கும் காட்சி.. இந்த பெண்களுக்கு தேவை பொது சிவில் சட்டம்.." என்று 30 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்றை வலதுசாரியினர் பலரும் சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். அதில், குழந்தையுடன் இருக்கக்கூடிய தாய்மார்கள் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் காட்சி பதிவாகியுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிவதற்காக காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "வடக்கு லெபனானின் திரிபோலி நகரில் உள்ள ஒரு பள்ளியில் பல பெண்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையின் காணொலி சமூக வலைதளங்களில் பரவியது. மேலும், பிரச்னைக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், குழந்தைகள் கையில் இருப்பதை யாரும் பொருட்படுத்தாமல், தொடர்ந்து மோதலில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது" என்று கடந்த ஜூன் மாதம் RT Arabic, Lebanon 24 உள்பட பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தொடர்ந்து, இது குறித்து தேடுகையில், லெபனானின் முன்னணி ஊடகமான An-Nahar அங்கு வைரலான காணொலியை ஃபேக்ட்செக் செய்துள்ளது. அதன்படி, "வடக்கு லெபனானின் திரிபோலியில் உள்ள பெத்தாவி பள்ளியில் இந்த சண்டை நடந்ததாக பகிரப்பட்டு வரும் நிலையில், இக்கூற்று தவறானது. உண்மையில், பெத்தாவி அகதிகள் முகாமில் அமைந்துள்ள “அல்-அஸ்ரியா மழலையர்” பள்ளியின் பெற்றோர்களுக்கான கொண்டாட்ட நிகழ்ச்சி பெத்தாவியில் உள்ள சுல்தான் சலா அல்-தின் மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது, இந்த சண்டை ஏற்பட்டுள்ளது" என்று கடந்த ஜூன் 16ம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
An-Nahar டுவிட்டர் பதிவு
Conclusion:
இறுதியாக, மனைவிகளுக்கு இடையே ஏற்பட்ட சண்டை என்று பகிரப்படும் காணொலியில் உண்மை இல்லை என்றும் லெபனானில் உள்ள பள்ளியின் சார்பாக நடைபெற்ற கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது பெற்றோர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறை தவறாக பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.