"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் நலமுடன் இருக்கிறார் என்றும் அவருடைய அனுமதியுடன் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படுகிறது" என்று நேற்று(பிப்.13) உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழ. நெடுமாறன் தஞ்சாவூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்நிலையில், தற்போது வெளியான பிரபாகரனின் புகைப்படம் என்று அவர் வயது முதிர்ந்து காணப்படும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி ஃபேஸ்புக்கில் இசக்கிராஜா தேவர் என்பவரும் டுவிட்டரில் மற்றொரு பயனாளரும் வைரலாகும் புகைப்படத்தை ஒத்த பிரபாகரனின் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். மேலும், இதே புகைப்படத்தை சுதன் குளச்சல் என்பவர் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
பிரபாகரனின் பிறந்தநாளான நவம்பர் 26ம் தேதி இவர்கள் அனைவரும் இப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். மேலும், இவர்கள் பகிர்ந்துள்ள புகைப்படத்தையே வயது முதிர்ந்த தோற்றத்தில் எடிட் செய்து தற்போது சிலர் பகிர்ந்து வருகின்றனர் என்பதை நம்மால் கூற முடிகிறது.
தொடர்ந்து, தேடுகையில் கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி ஒன் தமிழ் நியூஸ் இணையதளம், தற்போது வைரலாகும் அதே புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. மேலும், "விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் கோமா நிலையில் இருந்து வெளியே வந்தார்" என்று பொய் செய்தியையும் வெளியிட்டுள்ளது.
பிரபாகரன் புகைப்படத்தின் உண்மைத் தன்மை
Conclusion:
இறுதியாக, நமக்கு கிடைத்திருக்கக் கூடிய ஆதாரங்களின் அடிப்படையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் வயது முதிர்ந்த தோற்றத்தில் உள்ள புகைப்படம் எடிட் செய்யப்பட்ட பழைய புகைப்படம் என்பதை நம்மால் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.