குஜராத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 40,000-க்கும் அதிகமான பெண்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்திருந்தது. இதனையடுத்து, "மாநிலத்தில் 2016 மற்றும் 2020க்கு இடையில் காணாமல் போன 41,621 பெண்களில் 39,497 பேர் கண்டுபிடிக்கப்பட்டு அவர்களின் குடும்பங்களுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளனர்" என்று குஜராத் காவல்துறை டுவிட்டரில் விளக்கமளித்துள்ளது.
இந்நிலையில், "40000 ஆயிரம் பெண்கள் காணவில்லை குஜராத் மாநிலத்தில் அதில் இதுவும் ஒன்று" என்று பெண் ஒருவரை இரு ஆண்கள் இருசக்கர வாகனத்தில் வலுக்கட்டாயமாக கடத்திச் செல்லும் 19 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத்தன்மையைக் கண்டறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, "கலப்பு திருமணம் காரணமாக பீகாரில் மணப்பெண் சொந்த உறவினர்களால் கடத்தப்பட்டார்" என்ற தலைப்பில் கடந்த ஜூன் 6ஆம் தேதி டைம்ஸ் ஆப் இந்தியா இதே காணொலியை இணையதளத்தில் பதிவிட்டுள்ளது.
தொடர்ந்து தேடுகையில், அதே தேதியில் ஃப்ரீ பிரஸ் ஜர்னல் வெளியிட்டுள்ள செய்தியில், "பீகார் மாநிலம் அராரியாவில் கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெண்ணை, அவரது சகோதரர் மற்றும் உறவினர்களே இருசக்கர வாகனத்தில் பட்டப்பகலில் கடத்திச் சென்றனர். தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து மணமகளின் மாமனார் காவல்துறையிடம் புகார் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து உள்ளூர் காவல்துறையினர் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று அவரை அவரது குடும்பத்தினரிடம் இருந்து மீட்டனர். மேலும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பெண்ணின் வாக்குமூலத்தை பதிவு செய்ய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படும் என்றும் உள்ளூர் காவல்துறையினர் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் ஜூன் 3ஆம் தேதி அராரியாவில் உள்ள ஷ்யாம்நகர் கிராமத்தில் நடந்ததாகவும் அப்பெண் மீட்கப்பட்டதாகவும் ஏபிஎன் லைவ் கடந்த ஜூன் 6ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.
Conclusion:
நமது தேடலின் முடிவாக வைரலாகும் காணொலி பீகார் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்றும் அது குஜராத்தில் நடைபெறவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.