சிறுமியை கொடூரமாக தாக்கும் பெண்: இந்தியாவில் நடைபெற்ற சம்பவமா?

இந்தியாவில் பெண் ஒருவர் சிறுமியை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on  16 Jun 2023 4:20 PM GMT
இந்தியாவில் சிறுமியை கொடூரமாக தாக்கும் பெண் என்று வைரலாகும் காணொலி

இந்தியாவில் சிறுமியை கொடூரமாக தாக்கும் பெண் என்று வைரலாகும் காணொலி

"இந்த வீடியோவை வைரலாக்க எனக்கு உதவுங்கள், நீங்கள் உங்கள் குழந்தைகளை நேசிக்கிறீர்கள் என்றால், இந்த பெண்களை காவல்துறையின் கைகளில் சிக்க வைப்பதே ஊடகம், மகள் ராணிக்கு நீதி கிடைக்க, இந்த பெண்கள் விரைவில் காவல்துறையிடம் சிக்குவார்கள் என்று எனக்கு முழு நம்பிக்கை உள்ளது , தயவு செய்து" என்று 3 நிமிடமும் 20 விநாடிகளும் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், இது இந்தியாவில் நடைபெற்றது போன்று பகிரப்பட்டு வருகிறது.

வைரலாகும் காணொலி

(எச்சரிக்கை: இளகிய மனம் படைத்தவர்கள் இக்காணொலியைப் பார்ப்பதைத் தவிர்க்கவும்)

Fact-check:

இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது இது நிக்கராகுவாவில் நடைபெற்ற சம்பவம் என்பது தெரியவந்தது. CESGUAR என்ற டுவிட்டர் பயனர் கடந்த மே 5ஆம் தேதி காணொலியில் இருக்கும் பெண்ணின் புகைப்படத்தை பதிவிட்டு "இவர் யார்?" என்று கேள்வி எழுப்பி இருந்தார். பின்னர் அவரே மே 7ஆம் தேதி ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார்.

CESGUARன் டுவிட்டர் பதிவு

அதில், "நிக்கராகுவாவில் சிறுமியை கொடூரமாகத் தாக்கிய பெண்ணை காவல்துறையினர் கைது செய்தனர். சிறுமியைக் கொடூரமாக தாக்கும் காணொலி சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அப்பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர் சிறுமியின் தாய் Uwaldrina Siles என்றும் அவர் போதைக்கு அடிமையானவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது" என்று கூறப்பட்டிருந்தது.

இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து தேடினோம், கடந்த மே 6ஆம் தேதி Tiempo என்ற ஊடகம் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "மேற்கு நிக்கராகுவாவின் காண்டேகாவில் வைத்து Uwaldrina Siles என்ற அப்பெண் நிக்கராகுவா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சித்ரவதை செய்யப்பட்ட குழந்தைக்கு நான்கு வயது என்றும்" கூறப்பட்டுள்ளது. மேலும், இதே செய்தியை CHTV என்ற ஊடகமும் வெளியிட்டுள்ளது.

Conclusion:

நமது தேடலின் முடிவில் சிறுமியை பெண் ஒருவர் கடுமையாக தாக்கி சித்ரவதை செய்யும் காணொலி நிக்கராகுவாவில் நடைபெற்றது என்றும் அதில் இருக்கக்கூடிய பெண் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதையும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.

Claim Review:A video claiming that a woman attacking her child is from India
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Twitter, WhatsApp
Claim Fact Check:False
Next Story