“மூன்று நேரமும் துவா செய்யுங்கள்… இந்தியாவை இஸ்லாமிய நாடாக மாற்ற வேண்டி… மவுலானா பக்கத்தில் நிற்பது குல்லா அணிந்த மதசார்பற்ற கவுல் பிராமணன் என்பதை கவனத்தில் கொள்க…” என்ற கேப்ஷனுடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இஸ்லாமிய மதகுருக்களுடன் நின்று பிராத்தனை செய்யும் காணொலி சமூக வலைதளங்களில் (Archive) வைரலாகி வருகிறது. ராகுல் காந்தி உடன் நிற்கும் இஸ்லாமிய மதகுரு, “இந்தியா, இஸ்லாமிய நாடாக மாற வேண்டும்” என்று பிரார்த்தனை செய்ததாக கூறி காணொலியை பரப்பி வருகின்றனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மைத்தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்ததில், “அம்பேத்கர் நகரில் உள்ள கிச்சௌச்சா ஷெரீப் தர்காவுக்கு ராகுல் காந்தி வருகை” என்ற தலைப்பில் 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் தேதி Samay Live என்ற ஊடகம் வைரலாகும் காணொலி குறித்து செய்தி வெளியிட்டிருந்தது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, உத்தரப்பிரதேசத்தில் உள்ள அம்பேத்கர் நகரின் கிச்சௌச்சா ஷெரீப் தர்காவுக்கு ராகுல்காந்தி மேற்கொண்ட பயணம் குறித்த விரிவான செய்தி வெளியிடப்பட்டிருந்தது Aajtak. அதன்படி, “அவர் 30 நிமிடங்களுக்கு மேலாக தர்காவில் தங்கியிருந்தார். மேலும், மௌலானா(இஸ்லாமிய மதகுரு) சுஹைல் அஷ்ரப் மக்களின் அமைதிக்காகவும் நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக இந்தியா இஸ்லாமிய நாடாக வேண்டும் என்று ராகுல் காந்திக்கு அருகே இருந்த இஸ்லாமிய மதகுரு வேண்டியதாக வைரலாகும் காணொலி தவறானது என்றும் உண்மையில் மதகுரு நாட்டின் ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்காகவும் பிரார்த்தனை செய்தார் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.