“தமிழக அரசா...? தாலிபான் அரசா...? திருநெல்வேலி அரசு நிகழ்ச்சியில் இஸ்லாமிய சின்னம்?? திருநெல்வேலி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெறும் விளையாட்டு விழாவில் இஸ்லாமிய மதக்குறியீடான பிறையுடன் கூடிய சின்னம் அச்சிடப்பட்டுள்ளது.” என்ற கேப்ஷனுடன் இந்து முன்னணி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள (Archive) பக்கங்களில் புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது.
இதன்மூலம் திருநெல்வேலியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இஸ்லாமிய மதக்குறி இடம்பெற்றிருந்ததாகக் கூறி மாணவர்கள் சான்றிதழுடன் நிற்கும் புகைப்படத்தை அதில் எடிட் செய்துள்ளனர்.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் புகைப்படத்தில் இருப்பது திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா என்ற இஸ்லாமிய கல்லூரியின் லோகோ என்பது தெரியவந்தது.
இதன் உண்மை தன்மையைக் கண்டறிய வைரலாகும் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள லோகோவை தனியாக ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, அது திருநெல்வேலியில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் லோகோ என்பது தெரியவந்தது.
சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் லோகோ
தொடர்ந்து, இந்நிகழ்வு குறித்து கேட்பதற்கு சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியை தொடர்பு கொண்டது நியூஸ் மீட்டர். அப்போது, “இரண்டு (நவம்பர் 13) நாட்களுக்கு முன்பு திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பாக வாலிபால் போட்டி கல்லூரி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அச்சமயம் வைக்கப்பட்ட பேனர் தான் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
இதுபோன்ற பல்வேறு நிகழ்வுகள் இக்கல்லூரியில் நடைபெற்றுள்ளது. ஒன்றிய அரசின் நிகழ்ச்சிகள் கூட எங்களது கல்லூரி லோகோவுடன் நடைபெற்றுள்ளது. தற்போது நடைபெற்ற நிகழ்வு தான் சர்ச்சை ஆக்கப்பட்டுள்ளது” என்ற விளக்கத்தை அளித்தனர்.
மேலும், கடந்த அக்டோபர் 20ஆம் தேதி ஒன்றிய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் கீழ் தன்னாட்சி அமைப்பாக இயங்கும் நேரு யுவ கேந்திரா நடத்திய Meri Maati Mera Desh என்ற பிரச்சாரம் சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியில் நடைபெற்றது என்ற புகைப்படத்தை நமக்கு அனுப்பினர். அதிலும் கல்லூரியின் அதே லோகோ இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரு யுவ கேந்திரா நிகழ்ச்சியில் இடம்பெற்றுள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரியின் லோகோ
Conclusion:
முடிவாக, நம் தேடலில் இஸ்லாமிய மதக்குறியுடன் திருநெல்வேலியில் அரசு நிகழ்ச்சி நடைபெற்றதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் தவறானது என்றும் உண்மையில் அதில் இருப்பது அம்மாவட்டத்தில் உள்ள சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி என்ற இஸ்லாமிய கல்லூரியின் லோகோ என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.