“இஸ்ரேல் ஒரு பாலஸ்தீனிய தியாகியின் உடலை அனுப்பி, இந்த உடலுக்குள் வெடிகுண்டை நிறுவியது. அது நெரிசலான இறுதி ஊர்வலத்தில் வெடித்து, பலரைக் கொன்றது. இப்படிப்பட்ட கொடூரமான மற்றும் கொடூரமான மனிதனை உலகில் யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்” என்ற கேப்ஷனுடன் சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில், ஒருவரின் இறுதி ஊர்வலத்தின் போது வெடிகுண்டு வெடிக்கும் காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் இத்தகவல் தவறானது என்று தெரியவந்தது. இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தபோது, military.com என்ற இணையதளத்தில் ஜூலை 2ஆம் தேதி 2012ஆம் ஆண்டு வைரலாகும் காணொலியுடன் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “சிரியாவில் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தின் போது கார் வெடிகுண்டு வெடித்தது. இதில், 22 பேர் உயிரிழந்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கிடைத்த தகவலைக் கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, Los Angeles Times ஊடகம் இது குறித்து விரிவான செய்தியை வெளியிட்டிருந்தது. அதில், “சிரியாவின் ஜமால்கா நகரில் சனிக்கிழமை(ஜூன் 30, 2012) மாலை இறுதி ஊர்வலத்தின் போது கார் வெடிகுண்டு வெடித்ததில் குறைந்தது 85 பேர் கொல்லப்பட்டதாக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமைகள் குழுக்கள் தெரிவித்தன.
இது குறித்து இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்ட ஜமால்காவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அபு உமர் கூறுகையில், “அப்துல் ஹாதி ஹலபி என்பவர் அரசுப் படைகளின் துப்பாக்கிச் சூட்டின் போது கொல்லப்பட்டார். இவரது இறுதி ஊர்வலம் டமாஸ்கசில் நடைபெற்றது” என்றார். ஊர்வலம் ஒரு மசூதியைக் கடந்தபோது கார் வெடிகுண்டு வெடித்தது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதே செய்தியை CNN ஊடகமும் விரிவாக வெளியிட்டுள்ளது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாலஸ்தீனிய தியாகியின் உடலுக்குள் இஸ்ரேல் வெடிகுண்டை வைத்து அனுப்பியதாக வைரலாகும் தகவல் மற்றும் காணொலி தவறானது. அது உண்மையில் சிரியாவில் நடைபெற்ற கார் வெடிகுண்டு சம்பவத்தின் காணொலி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.