சென்னையே மிதக்கும் போது திமுக ஆதரவாளர்கள் மட்டும் சென்னை மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக பதிவிட்டு வருகின்றனர் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “ஊட்டி போல் ஜில்லென மாறிய சென்னை… மக்கள் மகிழ்ச்சி.. முன்புபோல் பெரும்பாலான இடங்களில் தண்ணீர் தேங்கவில்லை என டீ கடையில் முதியவர் பேசினார். தளபதியின் சிறப்பான ஆட்சிக்கு இதுவே சாட்சி” என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Fact-check:
இத்தகவலின் உண்மைத்தன்மையைக் கண்டறிய முதலில் செந்தில் வேலின் சமூக வலைதளப்பக்கங்களில் தேடினோம். அப்போது, நேற்று(டிசம்பர் 7) ஃபேஸ்புக்கில், “வழக்கம் போல் என் பெயரில் போலிச் செய்திகளைப் பரப்பத் தொடங்கியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார். மேலும், ஆய்வு செய்ததில் அவரது சமூக வலைதளப் பக்கங்களில் வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது போன்ற எந்த ஒரு தகவலையும் அவர் பதிவிடவில்லை என்பது தெரியவந்தது.
செந்தில் வேல் ஃபேஸ்புக் பதிவு
தொடர்ந்து, செந்தில் வேல் நியூஸ் மீட்டருக்கு அளித்த விளக்கத்தில், “என் பெயரில் அதிகமான போலி சமூக வலைதளக் கணக்குகள் இயங்கி வருகின்றன. அது போன்று தான் இந்த பதிவும் போலியானது. நான் அப்பதிவினை இடவில்லை” என்றார்.
Conclusion:
இறுதியாக, ஊட்டி போன்று ஜில்லென மாறிய சென்னை, மக்கள் மகிழ்ச்சி என்று ஊடகவியலாளர் செந்தில் வேல் ஃபேஸ்புக்கில் பதிவிட்டதாக வைரலாகும் தகவலில் உண்மை இல்லை என்றும் அவ்வாறாக அவர் பதிவிடவில்லை என்றும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.