"கர்நாடக மாநிலம் பெல்லாரி, சங்கனகல்லு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு யாரேனும் தண்ணீர் கேட்டோ அல்லது பழைய பாத்திரம் விற்பதாகக் கூறி வந்தாலோ அவர்களை வீட்டினுள் அனுமதிக்க வேண்டாம். அவர்கள் குழந்தைகள் மற்றும் பெண்களை கடத்தி உடல் உறுப்புகளை திருடி விற்பனை செய்பவர்கள். இவர்களிடம் கவனமாக இருங்கள்" என்று கன்னட மொழியில் பேசிய ஆடியோவுடன் 2 நிமிடம் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
பரவும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து கண்டறிவதற்காக அது தொடர்பாக கூகுளில் கீவர்ட் சர்ச்(சர்ச் முடிவு) செய்து பார்த்தபோது அப்படியாக எந்த ஒரு செய்தியும் வெளியாகவில்லை. தொடர்ந்து, காணொலியை முழுமையாக ஆய்வு செய்ததில் நான்கு வெவ்வேறு காணொலிகள் எடிட் செய்யப்பட்டு பகிரப்படுவது தெரிய வந்தது. அதில், முதல் 30 விநாடியில் இருக்கும் காணொலி குறித்து தேடிய போது அது குறித்த தகவல் எதுவும் கிடைக்கவில்லை. உடற்கூறு ஆய்வினால் ஏற்பட்ட "Y" வடிவிலான தழும்பு குழந்தைகளின் உடலில் இருப்பதை மட்டும் நம்மால் காண முடிகிறது.
அடுத்ததாக, 31 முதல் 59 விநாடியில் உள்ள காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, சச்சின் தாகூர் என்பவர் 2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் தேதி ஃபேஸ்புக்கில் காணொலியை பதிவிட்டுள்ளார். அதில், 1 நிமிடம் 28 விநாடியில், "இக்காணொலி கற்பனையாக உருவாக்கப்பட்டது. இதில் இருக்கக்கூடிய அனைத்தும் முன்கூட்டியே எழுதப்பட்டு எடுக்கப்பட்டது. விழிப்புணர்வுக்காக இது பகிரப்பட்டுள்ளது" என்று பொறுப்பு துறந்துள்ளனர். இருப்பினும் இதனை முதலில் யார் வெளியிட்டது என்ற விவரங்கள் இல்லை.
காணொலியில் பொறுப்பு துறக்கப்பட்டுள்ளது
மேலும், 1:00 முதல் 1:30 வரையிலான பகுதியில் இருக்கக்கூடிய காணொலியில் இருந்த குழந்தையின் கோரமான புகைப்படத்தை ஆய்வு செய்ததில். அதே புகைப்படம் ஏற்கனவே மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் பொய்யாக வைரலானதும், அப்புகைப்படத்தில் இருக்கக்கூடிய குழந்தையின் உண்மை நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் அந்நாட்டு காவல்துறையினர் ஊடகத்திற்கு பதிலளித்துள்ளனர்.
இறுதியாக, 1:30 முதல் 2:00 வரை இருக்கக்கூடிய காணொலி குறித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, மெக்சிகோவின் குரேரோவில் நடந்தது என்றும் அப்பகுதி டிரக் கார்டலைச்(Drug Cartel) சேர்ந்த சிலர் தந்தை மற்றும் மகனை கொடூரமாக கொலை செய்ததாக பல்வேறு இணையதளங்களும் யூடியூப் சேனல்களும் காணொலியுடன் செய்தி வெளியிட்டுள்ளன.
தந்தை, மகனை கொன்ற டிரக் கார்டல்
Conclusion:
நமது தேடலின் முடிவாக பகிரப்பட்டு வரும் காணொலியில் இருக்கக்கூடிய அனைத்தும் வதந்தி என்றும் வெவ்வேறு பகுதிகளில் நடைபெற்றதை இந்தியாவில் நடைபெற்றதாக தவறாக சித்தரித்து பரப்பி வருகின்றனர் என்றும் ஆதாரபூர்வமாக நிரூபிக்க முடிகிறது.