இந்தியாவில் வாழ்ந்து கொண்டு பாகிஸ்தானுக்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறந்து விட கோரி கேரளாவில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக சமூக வலைதளங்களில் (Archive) காணொலி வைரலாகி வருகிறது. அதில் பச்சை நிற கொடியுடன் இஸ்லாமியர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் வைரலாகும் காணொலி நிற்பது கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய வற்புறுத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று தெரியவந்தது.
வைரலாகும் காணொலியின் உண்மை தன்மையை கண்டறிய அதன் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த ஏப்ரல் 25ஆம் தேதி கேரளா அரங்காடியின் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. மேலும் அதில், “பாகிஸ்தான் கொடிக்கும் முஸ்லிம் லீக் கட்சியின் கொடிக்கும் வித்தியாசம் தெரியாத முட்டாள்கள் இக்காணொலியை தவறாக பரப்பி வருகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து, தேடுகையில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி Muslim league KL 14 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வைரலாகும் அதே காணொலி பதிவிடப்பட்டிருந்தது. கிடைத்த தகவலை கொண்டு கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, Times of India கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி இது தொடர்பாக செய்தி வெளியிட்டு இருந்தது.
அதன்படி, ஏப்ரல் 16 ஆம் தேதி கோழிக்கோட்டில் நடைபெறும் மெகா வக்ஃப் பாதுகாப்பு பேரணியுடன் தொடங்கி, நாடு முழுவதும் வக்ஃப் (திருத்த) மசோதாவிற்கு எதிராக போராட்டங்களை நடத்த IUML (இந்திய யூனியன் முஸ்லிம் லீக்) முடிவு செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இணையத்தில் வைரலாகும் காணொலி, வக்ஃப் திருத்தச் சட்டத்திற்கு எதிராக கோழிக்கோட்டில் நடைபெற்ற பேரணியின் போது எடுக்கப்பட்டது என்பதை IUML கட்சியின் காசர்கோடு பிரிவுத் தலைவர் அசிம் அரங்கடி நியூஸ் மீட்டர் ஆங்கிலத்திடம் உறுதிப்படுத்தினார். "இது மாநிலம் முழுவதும் இருந்து பங்கேற்ற ஒரு மாநிலம் தழுவிய பேரணி, மேலும் காசர்கோட்டைச் சேர்ந்த சுமார் 80 பேர் இதில் பங்கேற்றனர். இந்த காணொலி ஏப்ரல் 16 ஆம் தேதி கோழிக்கோட்டில் நடைபெற்ற பேரணியின் போது பதிவு செய்யப்பட்டது" என்றார் அசிம்.
பாகிஸ்தான் மற்றும் முஸ்லிம் லீக் கட்சியின் கொடிகளின் ஒப்பீடு
இவற்றைக் கொண்டு வைரலாகும் காணொலி கேரளாவில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நடத்திய வக்ஃபு திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் என்று தெரிய வந்தது. இது மட்டுமின்றி வைரலாகும் காணொலியில் இருக்கக்கூடிய கொடியையும் பாகிஸ்தான் நாட்டு கொடியையும் ஒப்பிட்டுப் பார்த்ததில் இரண்டும் வெவ்வேறாக இருப்பதும் தெரிய வந்தது.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பாகிஸ்தானிற்கு ஆதரவாக சிந்து நதி நீரை திறந்து விடக்கோரி கேரளாவில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வைரலாகும் காணொலி உண்மையில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வஃக்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தின் போது எடுக்கப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.