“சுகாதாரத்துறை தரவரிசை: கேரளா முதலிடம்! நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம்; தமிழ்நாடு இரண்டாம் இடம். கடைசி இடத்தில் மிக மோசமாக உத்திரபிரதேசம்!” என்று தீக்கதிர் ஊடகம் வெளியிட்டுள்ள நியூஸ் கார்ட் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இச்செய்தி சமீபத்தில் வெளியானது என்பது போன்று பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
Fact-check:
இச்செய்தியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய முதலில் கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, 2021ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி, பிபிசி தமிழ் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி, “2019-2020 ஆண்டில் ஒட்டுமொத்த சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களை தரவரிசைப்படுத்தி, இந்திய அரசின் 'நிதி ஆயோக்' அமைப்பு பட்டியல் தயாரித்துள்ளது. அதன்படி கேரளம் முதலிடத்தையும் தமிழ்நாடு இரண்டாவது இடத்தையும், உத்தர பிரதேசம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், 2021ஆம் ஆண்டு டிசம்பர் 27ஆம் தேதி தி இந்து ஊடகமும் இச்செய்தியை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, அதே தேதியில் நிதி ஆயோக்கின் சுகாதார செயல்பாட்டில் சிறப்பாக செயல்பட்ட மாநிலங்களின் தரவரிசையை ஒன்றிய அரசின் PIB(Press Information Bureau) தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளதை காணமுடியும். அதேசமயம், தீக்கதிர் ஊடகத்தின் ஃபேஸ்புக் பக்கத்தில் 2021ஆம் ஆண்டிற்கான பதிவுகளில் தேடியபோது வைரலாகும் நியூஸ் கார்ட் இடம்பெற்றிருந்த தெரியவந்தது. இறுதியாக நிதி ஆயோக் சமீபத்தில் இது போன்ற தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளதா என்று அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடிய போது கடைசியாக 2019-2020ஆம் ஆண்டுக்கு மட்டுமே வெளியிட்டுள்ளது தெரியவந்தது.
Conclusion:
நம் தேடலில் முடிவாக ஒன்றிய அரசின் நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம் என்றும் தமிழ்நாடு இரண்டாம் இடம் என்றும் உபி கடைசி இடம் என்றும் தீக்கதிர் செய்தி வெளியிட்டுள்ளதாக வைரலாகும் நியூஸ்கார்ட் 2021ஆம் ஆண்டில் வெளியான செய்தி என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.