“நிருபரின் கேள்வி? சார் பெட்ரோல் விலை எப்போது குறையும்…” என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகனிடம் பெண் செய்தியாளர் ஒருவர் பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்புகிறார். அதற்கு, “நான் இதற்கு பதில் ஒற்றை வரியில் கூற வேண்டும் என்றால், ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்…” என்று பதிலளிப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இக்காணொலியின் உண்மைத் தன்மையைக் கண்டறிய இது தொடர்பாக யூடியூபில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, நியூஸ் 18 தமிழ்நாடு 2023ஆம் ஆண்டு அக்டோபர் 16ஆம் தேதி தனது யூடியூப் ஒசேனலில், “ரிப்பீட் மோடில் ஜெய் ஸ்ரீ ராம் முழக்கமிட்ட மத்திய இணையமைச்சர் எல். முருகன்” என்ற தலைப்பில் ஷார்ட்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், “இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் போது ஜெய் ஸ்ரீ ராம் கோஷம் எழுப்பி உள்ளனர்” என்று ஆண் நிருபர் எல். முருகனிடம் கேள்வி எழுப்புகிறார். அதற்கு, “நான் இதற்கு பதில் ஒற்றை வரியில் கூற வேண்டும் என்றால், ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்… ஜெய் ஸ்ரீ ராம்…” என்று கூறுகிறார். இதே காணொலியை ABP Nadu, ZeeTamil உள்ளிட்ட ஊடகங்களும் ஷார்ட்ஸாக வெளியிட்டுள்ளன.
கடந்த 2023ஆம் ஆண்டு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் நடைபெற்றது. அப்போது, அந்தாண்டு அக்டோபர் 14ஆம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் போது ரசிகர்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் எழுப்பியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக Livemint உள்பட பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், இந்நிகழ்வு தொடர்பாக செய்தியாளர் ஒருவர் எல். முருகனிடம் எழுப்பிய கேள்விக்கு “ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீ ராம்…” என்று மீண்டும் மீண்டும் பதில் அளித்தார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த செய்தியாளரின் கேள்விக்கு “ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீ ராம்…ஜெய் ஸ்ரீ ராம்…” என்று பதிலளித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன் என்று வைரலாகும் காணொலியில் உள்ள பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கான ஆடியோ மட்டும் எடிட் செய்யப்பட்டது என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.