"இந்திய நீதித்துறை வரலாற்றில் முதல் முறையாக மஹாராஷ்டிராவில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சிகள்" என்று 1 நிமிடம் 17 விநாடிகள் ஓடக்கூடிய காணொலி ஒன்று சமூக வலைதளங்களில்(Archive link) வைரலாகி வருகிறது. அதில், வழக்கறிஞரின் வருங்கால கணவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதியை பெண் வழக்கறிஞர் தாக்குகிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மைத்தன்மையைக் கண்டறிவதற்காக கூகுளில் இது தொடர்பாக கீவர்ட் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி டைம்ஸ் ஆஃப் இந்தியா வைரலாகும் காணொலியுடன் செய்தி ஒன்றை வெளியிட்டு இருந்தது. அதில், "உத்திரப்பிரதேச மாநிலம் காஸ்கஞ்சில் முடியை பிடித்துக்கொண்டு இரண்டு பெண் வழக்கறிஞர்கள் சண்டையிட்டுக்கொண்டனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்" என்று கூறப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் மனிஷ் மிஷ்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் இத்தகவலை ஹிந்தியில் பதிவிட்டுள்ளார்.
மனிஷ் மிஷ்ராவின் பதிவு
மேலும், இது தொடர்பாக தி ப்ரிண்ட் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், "காஸ்கஞ்ச் மாவட்ட நீதிமன்றத்தின் குடும்ப நீதிமன்றத்தில் இரு பெண் வழக்கறிஞர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலை அடுத்து ஒரு பெண் வழக்கறிஞர் மற்றும் அவரது கட்சிகாரருக்கு எதிராக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக வழக்கறிஞர் சுனிதா கௌசிக் தன்னை தாக்கினார் என்று காஸ்கஞ்சைச் சேர்ந்த வழக்கறிஞர் யோக்யதா சக்சேனா கோட்வாலி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
ராகுல் போஸ், பாருல் சக்சேனா தம்பதியினரின் திருமண விவகாரம் தொடர்பான வழக்கிற்காக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கு வந்திருந்த போது, இரு தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட கைகலப்பு வன்முறையாக மாறியது" என்று கூறப்பட்டுள்ளது.
Conclusion:
இறுதியாக, மஹாராஷ்டிராவில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிட்டுக்கொள்ளும் காட்சி என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி பொய் என்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது. உண்மையில், அது உத்திரப்பிரதேசத்தில் தம்பதியரின் திருமண விவகாரம் தொடர்பான வழக்கிற்காக வந்த இரு பெண் வழக்கறிஞர்களுக்கு இடையை ஏற்பட்ட மோதல் என்பதும் தெரிய வந்துள்ளது.