நாட்டின் நிலப்பரப்பினை ராமேஸ்வரம் தீவுடன் இணைக்கும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாம்பன் கடலில் கட்டப்பட்டுள்ள புதிய ரயில் பாலத்தினை பிரதமர் மோடி வரும் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
இந்நிலையில், நரேந்திர மோடி வருகையை யொட்டி பாம்பனில் உள்ள பள்ளிவாசலின் மினாராவில் உள்ள “அல்லாஹு அக்பர்” என்ற எழுத்தை தார்பாய் போட்டு தமிழ்நாடு அரசு மூடி உள்ளது என்று கூறி சமூக வலைதளங்களில் (Archive) காணொலி மற்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
Fact-check:
நியூஸ் மீட்டரின் ஆய்வில் பிரதமர் மோடியின் வருகைக்காக அது மூடப்படவில்லை என்று தெரியவந்தது.
வைரலாகும் தகவல் உண்மைதானா என்பதை அறிய இதுகுறித்து கூகுளில் கீவர்ட் சர்ச் செய்து பார்த்தபோது, நேற்று (ஏப்ரல் 3) தினகரன் ஊடகம் இதுதொடர்பாக செய்தி வெளியிட்டிருந்தது. அதன்படி, பாம்பன் ஜாமியா மஸ்ஜித் பெரிய பள்ளிவாசலில் அலங்கார விளக்கு பலகை அகற்றப்பட்டது குறித்து காவல் துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “பாம்பன் பள்ளிவாசல் மினராவில் ஒளிரும் எழுத்துக்கள், கடற்படை கேட்டுக்கொண்டதை அடுத்து அதனை அகற்ற அறிவுறுத்தப்பட்டு, தார்பாய் கொண்டு மூடப்பட்டது.
தினகரன் வெளியிட்டுள்ள செய்தி
தற்போது தார்ப்பாய் அகற்றப்பட்டுள்ளது. எனினும், உயர் கோபுரங்களில் விளக்குகள் பொருத்தும் போது, கலங்கரை விளக்கம் போல தோற்றமளித்து, கப்பல் மற்றும் படகுகளுக்கு சிக்கல் ஏற்படக் கூடாது என்பதற்காக காவல்துறையில் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மின்னம்பலம் ஊடகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியின்படி, “மண்டபம் காவல் ஆய்வாளர் சரிதாபானு கடந்த மார்ச் 16ஆம் தேதி வெளியிட்ட உத்தரவில், இந்த பள்ளிவாசல் மினாரா அமைந்திருக்கும் பகுதியானது பாம்பன் மேற்கு வடக்கு, தெற்கு, கடற்கரைக்கு மிக அருகில் உள்ளதால் சுமார் 1/2 கிலோ மீட்டருக்கு அப்பால் இருந்து பார்க்கும்போது அந்த விளம்பர பலகையின் தோற்றம் ஒரே விளக்காகவும் கலங்கரை விளக்கின் தோற்றத்தைப் போலவும் தோற்றமளிக்கிறது.
அதனால் அதிகமான மீன்பிடி படகுகளும், கப்பல் போக்குவரத்தும், நாட்டுப்படகுகளும் சென்று வரக்கூடிய பகுதியில் படகுகள் மற்றும் கப்பல் போக்குவரத்திற்கு (Navigation Problem) மிகவும் இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும் இருந்து விபத்து ஏற்படக்கூடிய வகையிலும் அமைந்துள்ளதால் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் முன் அனுமதி பெற்று இந்த அலங்கார மின்விளக்கு பலகையினை வைத்துகொள்ள இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது.
மின்னம்பலம் வெளியிட்டுள்ள செய்தி
மேலும், மேற்கூறிய செயல் முறை ஆணையில் குறிப்பிடப்பட்டுள்ள செயல் ஆணைகளை மீறும் பட்சத்தில் தங்கள் மீது சட்டப்படியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, Pettai Tv என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அப்பள்ளியின் தலைவர் ஹனிபா அளித்துள்ளது விளக்கத்தின் படி, “பிரதமர் மோடியின் வருகைக்கும் மினராவில் தார்பாய் வைத்து மூடப்பட்டதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை. பள்ளிவாசல் வரக்கூடிய ஏப்ரல் 18ஆம் தேதி தான் திறக்கப்பட உள்ளது. கட்டுமானத்திற்காக கட்டப்பட்ட சாரங்களை நீக்கும்போது மினராவில் உள்ள “அல்லாஹு அக்பர்” என்ற லைட்டிங் போர்டில் சேதம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக தார்பாய் போட்டு மூடினோம்” என்றுதெரிவித்துள்ளார்.
Conclusion:
முடிவாக நம் தேடலில் பிரதமர் மோடியின் வருகையை ஒட்டி பாம்பனில் உள்ள பள்ளிவாசலின் மினராவில் இருந்த “அல்லாஹு அக்பர்” என்ற எழுத்து தார்பாய் கொண்டு மறைக்கப்பட்டதாக வைரலாகும் தகவலுக்கும் மோடியின் வருகைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று தெரியவந்தது.