“காங்கிரஸ் கட்சியின் தலைவர் கார்கே கூறுவதை கேளுங்கள், "உங்கள் வீட்டில் நுழைந்து, அலமாரியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை எடுத்து அதிக பிள்ளைகளை பெற்ற முஸ்லீம்களுக்கு கொடுப்போம். இந்துக்களிடம் அதிக பிள்ளைகள் இல்லாததற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?” என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறியதாக அவர் பேசும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வைரலாகும் காணொலி
Fact-check:
இதன் உண்மை தன்மையை கண்டறிய காணொலியின் குறிப்பிட்ட பகுதியை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்து பார்த்தோம். அப்போது, கடந்த மே 3ஆம் தேதி "குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே" என்ற தலைப்பில் காங்கிரஸின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் முழு நீள காணொலி வெளியிடப்பட்டிருந்தது.
அதில், 31:50 பகுதியில் பேசும் மல்லிகார்ஜுன் கார்கே, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும். எத்தனை பட்டதாரிகள் உள்ளனர், வருமானம் எவ்வளவு வருகிறது வருகிறது, தனிநபர் வருமானம் எவ்வளவு என்பதை எல்லாம் பார்த்து வாய்ப்புகளை சமமாகப் பகிர்ந்தளிப்போம்” என்றார்.
தொடர்ந்து பேசுகையில், “நாங்கள் இப்படிச் சொல்வதை பிரதமர் மோடி எவ்வாறு மாற்றித் திரித்துச் சொல்கிறார் என்றால், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் உங்கள் (இந்துக்கள்) வீடுகளின் உள்ளே நுழைந்து அலமாரியை உடைத்து அதில் உள்ள பணத்தை அதிக பிள்ளை பெற்ற முஸ்லிம்களுக்குக் கொடுக்க இருக்கிறார்கள் எனப் பொய் பேசுவதாகக் குறிப்பிடுகிறார்” என்கிறார்.
இதில், காங்கிரஸ், ஜாதி வாரியான கணக்கெடுப்பைக் மேற்கொள்ளும் என்றும் அதற்கேற்ப வாய்ப்புகள் பகிர்ந்தளிக்கப்படும் என்றும் காங்கிரஸ் கூறுவதை மோடி தவறாகத் திரித்துப் பொய் பிரச்சாரம் செய்து வருவதை கார்கே சுட்டிக்காட்டிப் பேசியுள்ளார்.
Conclusion:
நம் தேடலின் முடிவாக பிரதமர் மோடி தவறாகத் திரித்துப் பொய் பிரச்சாரம் செய்து வருவதை கார்கே சுட்டிக்காட்டிப் பேசிய காணொலியின் பகுதியை மட்டும் எடிட் செய்து அது கார்கேவின் கருத்து போலத் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்று ஆதாரப்பூர்வமாக நிரூபிக்க முடிகிறது.